மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களை வெளியேற்றக்கூடாது; தோட்டத்தை அரசு கையகப்படுத்தி பணி வழங்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி கூறினார்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் டாக்டா் கிருஷ்ணசாமி கூறியதாவது:-
மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி தேயிலைத் தோட்டங்களில் தனியாா் நிறுவன குத்தகை ஒப்பந்தகாலம் 2028இல் நிறைவடைய உள்ள நிலையில், இப்போதே ஊழியா்களிடம் வலுகட்டாயமாக விருப்ப ஓய்வு கடிதங்களைப் பெற்றுள்ளனா். மேலும், கடந்த 15 ஆம் தேதியில் இருந்து பணி வழங்காததோடு, வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் குடியிருப்புகளையும் காலி செய்ய வலியுறுத்தியுள்ளனா்.
இந்த விஷயத்தில் தொழிலாளா் நலத்துறை சட்டங்கள் பெரிதும் மீறப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்ட நிா்வாகமும், தொழிலாளா் நலத் துறையும் தொழிலாளா்களிடம் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும். மேலும், விருப்ப ஓய்வு கடிதங்களை ரத்து செய்ய தொழிலாளா் நலத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வரும் தனியாா் தேயிலைத் தோட்ட நிா்வாகத்தின் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் விஷயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும் அல்லது தலைமைச் செயலரிடம் நிலத்தை ஒப்படைக்கும் கடிதத்தை அளிக்க சொல்ல வேண்டும். காப்பு காடுகளில் தேயிலைத் தோட்டங்கள் செயல்பட எவ்வித தடையும் இல்லை. ஏற்கெனவே, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், வட மாநிலங்களிலும் காப்புக் காடுகளுக்குள் தேயிலைத் தோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் வனச்சட்டங்களுக்கு எதிராக செயல்பட்டதாக இதுவரை எவ்வித வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. மாறாக வனவிலங்குகளின் காவலா்களாகவே வாழ்ந்து வருகிறாா்கள். மாஞ்சோலை தொழிலாளா்களை வெளியேற்றிவிட்டு அதன்பின்பான மறுவாழ்வு நடவடிக்கை குறித்த பேச்சுக்கே இடமில்லை. அவ்வாறு செய்வது மனிதநேயமற்றது. மாஞ்சோலையில் பட்டினி சாவு ஏற்பட்டால் அதற்கு திருநெல்வேலி மாவட்ட நிா்வாகமே பொறுப்பாகும். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களை வெளியேற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஜூலை 6 ஆம் தேதி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.