மோசடி புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடைக்கால முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துவிட்டார் என்று கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற தொழிலதிபர் சமீபத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். இதையடுத்து, கரூர்- மேலக்கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதரும், கரூர் டவுன் காவல் நிலையத்தில் நில அபகரிப்பு குறித்து ஒரு புகார் அளித்து இருந்தார். இதன் அடிப்படையில் ஷோபனா, யுவராஜ், பிரவீன் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்ற அச்சமடைந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜூன் 12 ஆம் தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை ஜூன் 25 ஆம் தேதி நடந்தபோது, எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், முன் ஜாமீனும் மறுக்கப்பட்டதால் தலைமறைவானார் எம்.ஆர்.விஜயபாஸ்கர். தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் விஜயபாஸ்கரை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிபிசிஐடி தனிப்படை போலீசார் அவரைத் தேடி வருகின்றனர். இதற்கிடையே முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட மற்றொரு புகாரில் ஆறு பிரிவுகளில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வரும் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என்றும், அவரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதால், இடைக்கால முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், இடைக்கால முன்ஜாமீன் மீதான இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின், நாளை, அதாவது இன்றைக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஒத்தி வைத்தார். இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடைக்கால முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து இன்று கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், இடைக்கால முன்ஜாமீன் மனுவுக்கு பதிலாக வழக்கமான முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தால் விசாரிப்பதாகவும், வழக்கமான முன் ஜாமீன் மனுவை நாளை தாக்கல் செய்யலாம் என்றும் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.