டீன்ஸ் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதம்: பார்த்திபன் போலீசில் புகார்!

இயக்குநர் பாரத்திபன் தற்போது டீன்ஸ் என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படம் வரும் 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் திடீரென அவர் கோவையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

13 பள்ளிக்குழந்தைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் தான் டீன்ஸ். இப்படத்தை பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில் குழந்தைகளை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வெளியான இந்த படத்தின் டிரைலரில், பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஒரு நாள் பள்ளிக்கூடத்தை கட்டடித்து விட்டு நண்பரின் பண்ணை வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு 500 வருட பழமைவாய்ந்த பாழடைந்த கிணற்றை பார்க்கின்றனர். அந்த கிணறு குறித்து, அந்த கிணற்றின் அமானுஷியங்கள் நிறைந்த பேய் கதைகள் இருக்கும் கூறப்படும் நிலையில் அந்த பண்ணைக்குள் குழந்தைகள் மாட்டிக்கொள்கின்றனர். அதிலிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதை திகில் கலந்து பார்த்திபன் கூறியுள்ளார்.

இத்திரைப்படம் வரும 12ந் தேதி வெளியாக உள்ள நிலையில், கோவை தனியார் கிராபிக்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் சிவபிரசாத் என்பவர் மீது புகார் கொடுத்துள்ளார். அதில், VFX பணிகளை கடந்த பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் முடித்துக் கொடுப்பதாக கூறியிருந்தார். இதற்காக, சிவபிரசாத் 68 லட்சத்து 54 ஆயிரத்து 400 ரூபாய் கேட்ட நிலையில், பார்த்திபன், 42 லட்சம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஒப்பந்தமும் போடப்பட்டன, ஆனால், கிராபிக்ஸ் காட்சிகள் பிப்ரவரி மாதத்திற்குள் முடித்துக்கொடுக்காததால், பார்த்திபன் ஏப்ரல் 19ஆம் தேதி வரை கால நீட்டிப்பு கொடுத்துள்ளார். இருப்பினும், நான்கில் ஒரு பங்கு பணிகளை மட்டுமே முடித்த சிவபிரசாத், படத்தின் முக்கிய கிராபிக்ஸ் காட்சிகளை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க முடியாது என கூறியிருக்கிறார்.

இதனிடையே, சிவபிரசாத் கடந்த ஜூன் 4ஆம் தேதி 88 லட்சத்து 38 ஆயிரத்து 120 ரூபாய் தொகை செலுத்த வேண்டும் என பார்த்திபனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இந்நிலையில், சிவபிரசாத் ஒப்பந்தத்தை மீறி கூடுதலாக பணம் கேட்டது, குறிப்பிட்ட தேதியில் பணிகளை முடித்துக் கொடுக்கவில்லை. தன்னை ஏமாற்றியதாக பார்த்திபன் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் நம்பிக்கை மோசம், ஏமாற்றுதல் (420) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.