பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஆம்ஸ்ட்ராங் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீஸார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.
இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கின் தந்தை, தீவிர பெரியாரிய மற்றும் திராவிடர் கழக ஆதரவாளர். விளிம்பு நிலை மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார் ஆம்ஸ்ட்ராங். வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், 2000 ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்று சென்னை மாமன்ற உறுப்பினர் ஆனார் ஆம்ஸ்ட்ராங். ஆம்ஸ்ட்ராங் சென்னை மாமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு பணிகளைச் செய்தார். குறிப்பாக அவரது தலைமையில் நடந்த போராட்டத்தின் காரணமாக, போதிய பாதுகாப்பு உபகரணம் இன்றி, சரியான ஊதியம், பணியிட பாதுகாப்பு இன்றி பணியாற்றிய சுமார் 2500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு ஊழியர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.
2007 ஆம் ஆண்டில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பில் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். நீட் தேர்வு ரத்து கோரியும், சிறுபான்மையினர் பாதுகாப்புக்காகவும், தலித் மக்களின் நலன் காக்கவும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார். தலித் அமைப்புகளுடன் இணக்கமாக அரசியல் பணியாற்றி வந்தார்.