சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று மர்மகும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு வைகோ கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு தமிழகத்தில் கூலிக்கு கொலை செய்யும் கும்பல் சாதாரணமாக நடமாடுகிறார்கள் என்ற பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். நேற்று மாலையில் அவர் தனது வீட்டருகே நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். இந்த வேளையில் பைக்குகளில் ஜோமோட்டோ உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் வந்த கும்பல் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்தது சென்றது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஆம்ஸ்ட்ராங் மீட்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. தலித் தலைவராக அறியப்படும் ஆம்ஸ்ட்ராங்க்கு பெரம்பூர் பகுதியில் தனி செல்வாக்கு உள்ளது. இதனால் அவரது கொலையை கண்டித்து நேற்று இரவே சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கூறி 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தில் அவரது தம்பி பொன்னை பாலு தலைமையிலான கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை திட்டமிட்டு கொன்றது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தான் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மிக இளம் வயதில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் பொறுப்பை ஏற்று ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங் . படுகொலைக்குக் காரணமான உண்மையான கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கூலிக்குக் கொலை செய்யும் கும்பல் சர்வ சாதாரணமாக நடமாடுவதும், படுகொலைகளை நிகழ்த்தி வருவதும் தொடர் நிகழ்வுகள் ஆகி வருகின்றது. தமிழ்நாட்டின் நலனுக்காக மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கு அபாய அறிவிப்பாக சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதற்கு காவல்துறையினர் இடமளிக்கக் கூடாது. பொதுவாழ்வில் இன்னும் மக்கள் பணி ஆற்ற வேண்டிய பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்கும் அவரது இயக்க தொண்டர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.