கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெல்லையில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட இளைஞர்களை அடையாளம் கண்டு காவல் துறையினர் கைது செய்து வருவதாகவும், அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா. இவர் கடந்த மாதம் தனது காதலியுடன் பாளையங்கோட்டை அருகே கேடிசி நகரில் உள்ள பிரபல ஓட்டலில் உணவருந்த சென்றார். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் ஹோட்டல் வாசலில் வைத்து தீபக் ராஜாவை, அவரது காதலி கண் முன்பே கழுத்து மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த தீபக் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவத்தால் நெல்லை, தூத்துக்குடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஒரு வாரத்துக்கு பின் தீபக் ராஜாவின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிற்கு நான்கு மணி நேரம் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து 2000 போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இறுதி ஊர்வலத்தில் மட்டும் டிஐஜி, எஸ்பி உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகளோடு 500 போலீசார் நடந்தே சென்றனர். குறிப்பாக 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள் புடை சூழ தீபக் ராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான வாகை குளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அப்போது சிலர் தமிழக அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராக முழக்கம் இட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஊர்வலத்தின் போது மிரட்டல் விடுத்ததாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறி சில இளைஞர்களை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் பலரை அடையாளம் கண்டு கைது செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் உலாவுகின்றன. இதற்கு கண்டனம் தெரிவித்து நெல்லையில், சிலர் சமூக வலைதளங்களில் பதிவுகளை இட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தீபக் ராஜாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட இளைஞர்களை அடையாளம் கண்டு காவல் துறையினர் கைது செய்து வருவதாகவும், அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
அண்மையில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒற்றைக் காரணத்திற்காக, தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்களைக் காவல்துறை வழக்குப்பதிவு செய்து கொடும் குற்றவாளிகள் போலத் தேடித் தேடி கைது செய்துவருவது வன்மையான கண்டனத்துக்குரியது. தீபக் ராஜா படுகொலை செய்யப்பட்ட காணொலி ஊடகங்களில் வெளியாகி தென் மாவட்ட மக்களிடத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இறுதி ஊர்வலத்தில் மக்கள் தன்னெழுச்சியாகக் கலந்துகொண்டதை பெருங்குற்றம் போலக் கட்டமைத்து கைது செய்வதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. ஆகவே, தீபக் ராஜா இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ள தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.