போர்க்களத்தில் அமைதிக்கான எந்தத் தீர்வும் கிடைக்காது: பிரதமர் மோடி!

“ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக அப்பாவிக் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்திருப்பது மனதுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. போர்க்களத்தில் அமைதிக்கான எந்தத் தீர்வும் கிடைக்காது. பேச்சுவார்த்தையால் மட்டுமே அது சாத்தியம். அமைதியை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்கும்” என்று ரஷ்ய அதிபர் புதினுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றார். இந்தியா, ரஷ்யா இடையிலான 22-வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் விதமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். தொடர்ந்து உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மோடியும், புதினும் அதிகாரபூர்வமாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு இரு தலைவர்களின் முதல் சந்திப்பு இதுவாகும்.

இந்தச் சந்திப்பின்போது புதினிடம் பேசிய பிரதமர் மோடி, “ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக அப்பாவிக் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்திருப்பது மனதுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. போர்க்களத்தில் அமைதிக்கான எந்தத் தீர்வும் கிடைக்காது. பேச்சுவார்த்தையால் மட்டுமே அது சாத்தியம். அமைதியை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்கும். அமைதியை மீட்டெடுப்பதற்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது. இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது என்பதை நான் உங்களுக்கும் உலக சமூகத்துக்கும் உறுதியளிக்கிறேன். புதிய தலைமுறையினருக்கு ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற, அமைதிப் பேச்சுகள் தேவை. மாறாக வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுக்கு மத்தியில் வெற்றி கிடைக்காது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதலால் கடந்த 40 ஆண்டுகளாக தீவிரவாதத்தின் சவால்களை இந்தியா எதிர்கொண்டுள்ளது. அனைத்து வகையான தீவிரவாதத்தையும் நான் கண்டிக்கிறேன்” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய நாட்டின் உயரிய விருதான புனித ஆன்ட்ரூ அப்போஸ்தலர் என்ற விருது வழங்கி அதிபர் விளாதிமீர் புதின் இன்று (ஜூலை 9) கெளரவித்தார்.

ரஷ்ய நாட்டின் உயரிய குடிமகன் விருதாக இது பார்க்கப்படுகிறது. விருது பெற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ”ரஷ்ய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதை எனக்கு வழங்கியதற்கு இதயப்பூர்வமான நன்றி. இது எனக்கான கெளரவம் மட்டும் அல்ல, 140 கோடி இந்திய மக்களுக்கான கெளரவம். இந்தியா – ரஷ்யா இடையிலான உறவு, ஆழமான நட்பு, பரஸ்பர நம்பிக்கைக்கு வழங்கப்பட்ட மரியாதை. இரு நாட்டின் உறவை வலுப்படுத்த அளித்துவரும் உங்களின் (விளாதிமீர் புதின்) பங்களிப்பிற்கு நன்றி. இந்தியா ரஷ்யா உறவுகள் எல்லா விதங்களிலும் வலுப்பெற்று புதிய உயரங்களை எட்டியுள்ளன” என மோடி குறிப்பிட்டார்.

விருது வழங்கிய பிறகு இது தொடர்பாக புதின் கூறுகையில், ”ரஷ்ய நாட்டின் உயரிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியதில் மகிழ்ச்சி. பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் ரஷ்யா – இந்தியா உறவு வலிமை பெற்றுள்ளது. சர்வதேச அரங்கில் ரஷ்யா – இந்தியா ஒத்துழைப்பை மேம்படுத்த மோடியின் பங்களிப்பு அளப்பரியது” எனத் தெரிவித்தார்.