தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு தரப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்ததாக வரும் செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
விருதுநகர் மாவட்டத்தின் பட்டாசு ஆலைகளில் தொடர்ச்சியாக வெடிவிபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து நானும் பல்வேறு முறை சுட்டிக்காட்டி வந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அக்கறையற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு தரப்பரிசோதனை மேற்கொள்வதுடன், வெடிவிபத்தை தடுப்பதற்கான புதிய கொள்கை வடிவமைத்து செயல்படுத்துமாறும் விடியா திமுக அரசின் முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.