போதைப் பொருளுக்கு எதிரான தெலங்கானா அரசின் முயற்சி: சித்தார்த் ஆதரவு!

போதைப்பொருளுக்கு எதிராக முதல்வர் ரேவந்த் ரெட்டியின் போராட்டத்தில் அவரது அரசின் முயற்சிகளை முழுமையாக ஆதரிக்கிறேன் என்று சித்தார்த் கூறியுள்ளார்.

ஷங்கரின் ‘இந்தியன் 2’ படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இது, தெலுங்கில் ‘பாரதியுடு 2’, இந்தியில் ‘ஹிந்துஸ்தானி 2’ என்ற பெயர்களில் வெளியாகிறது. ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்த இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டனர்.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சமீபத்தில் பேசிய போது, “டிக்கெட் விலையை அதிகரிக்க விரும்பும் நடிகர்கள், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வீடியோக்களை உருவாக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய சித்தார்த், “ஒருங்கிணைந்த ஆந்திராவில் ஆணுறை பயன்படுத்துவதன் அவசியத்தை உணர்த்தும் திட்டத்தில் உதவியவன் நான். ஒரு முதல்வர் சொன்னதால் நான் அதை செய்யவில்லை. அதே போல, ஒவ்வொரு நடிகருக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது” என்றார். அவர் கூறிய கருத்து சர்ச்சையானது.

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து சித்தார்த் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “இந்தியன் 2 பட விழாவில் நான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. போதைப்பொருளுக்கு எதிராக முதல்வர் ரேவந்த் ரெட்டியின் போராட்டத்தில் அவரது அரசின் முயற்சிகளை முழுமையாக ஆதரிக்கிறேன். எனது வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.