பணமோசடி வழக்கில் ஜாக்குலின் ஃபொ்னாண்டஸுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பணமோசடி வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ. 200 கோடி பணமோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபர்களை மிரட்டி பெரிய அளவில் பணம் பறித்த விவகாரத்தில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் ஆதாயம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ஜாக்குலினுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

மோசடி செய்து பெற்ற பணத்தில் ஜாக்குலினுக்கு சந்திரசேகர் விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள் வாங்கிப் பரிசளித்ததாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2022- ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் சந்திரசேகரின் குற்றச்செயல்கள் குறித்த பிண்ணனி தெரிந்த பின்னரும் ஜாக்குலின் அவர் வழங்கிய விலையுயர்ந்த பரிசுப் பொருள்களை பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜாக்குலின் ஃபொ்னாண்டஸ் இதுவரை 5 முறை அமலாக்கத்துறையால் விசாரணை செய்யப்பட்டுள்ளார். ஆனால், ஒவ்வொரு முறையும் தான் நிரபராதி எனவும், சந்திரசேகரின் குற்றப்பிண்ணனி குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது எனவும் கூறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.