தமிழக அரசியல் களத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பெரிதும் கவனம் பெற்ற நிலையில் கள்ளச்சாராய விற்பனை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பகீர் கிளப்பியுள்ளார். கள்ளக்குறிச்சிக்கு அடுத்து விக்கிரவாண்டி தொகுதியிலும் கள்ளச்சாராயம் அருந்தி பலர் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இதிலிருந்து பல்வேறு தரப்பினரும் பாடம் கற்றுக் கொள்ளும் சூழல் உருவானது. கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்தது. ஆனால் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜூலை 10, புதன்கிழமை. திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானதால் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அதிமுக போட்டியிடவில்லை. திமுக, பாமக, நாம் தமிழர் என மும்முனை போட்டி மட்டுமே. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு சீல் வைத்து பத்திரமாக வைக்கப்பட்டன.
இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-
ஓராண்டிற்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் விஷச் சாராயம் அருந்தி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அன்றைக்கு வீரவசனம் பேசினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால் கள்ளக்குறிச்சியில் 70க்கும் மேற்பட்டோர் விஷச் சாராய அருந்தி உயிரிழந்துள்ளனர். இதுதான் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவதா? இப்படிப்பட்ட சூழலில் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், அதுவும் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் விஷச் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டு 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது என்று ஆளும் அரசு திட்டமிட்டு செயல்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிக கவனம் செலுத்திய திமுக அரசு, அதே தொகுதியில் விஷச் சாராயம் விற்கப்பட்டதை தடுக்க தவறிவிட்டது. தற்போது பாதிக்கப்பட்ட நபர்களை குணப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மருத்துவமனைக்குள் உறவினர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த மருத்துவமனையை காவல்துறை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
இங்கே விஷச் சாராயம் அருந்தி சாகிறார்கள். அங்கே மாநிலத் தலைவர் வெட்டி கொல்கிறார்கள். என்னய்யா நடக்கிறது இந்த ஆட்சியில்? காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? டிஜிபி சங்கர் ஜிவால் என்ன செய்கிறார்? ஏசி அறையிலேயே இருந்து கொண்டு அனைத்து குற்றங்களையும் தடுத்து விடுவார். ஏன் இங்கு வரவில்லை. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினர்.