அண்ணாமலை என்ற வேதாளம் தற்போது அதிமுகவை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் 314 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது உடனிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:-
மாவீரர் அழகு முத்துக்கோன், வெள்ளையனுக்கு எதிராக குரல் கொடுத்தவர். வெள்ளையனுக்கு அடிபணியாமல் வாழ்ந்த முதல் வீரர் அழகு முத்துக்கோன்தான். தன்னுடன் இருக்கும் நபர்களை காட்டிக் கொடுக்க வேண்டும் என கூறியும் தன் தலையே போனாலும் சரி காட்டிக் கொடுக்கும் துரோகத்தை செய்ய மாட்டேன் என சொன்னார். வீரனாக பிறந்து வீரனாகவே வாழ்ந்தவர்.
ஓபிஎஸ்ஸை பொருத்தமட்டில் கட்சித் தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு துரோகத்தை செய்துள்ளார். ஓபிஎஸ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் கிடையாது. டிடிவி தினகரன் இல்லையென்றால் ஓபிஎஸ் இல்லை. பொறுப்பு கொடுத்த கட்சி அலுவலகத்தையே சென்று அடித்து உடைத்திருக்கிறார். கட்சிக்கு எந்த ஒரு விசுவாசமும் அவரிடம் கிடையாது. கட்சியில் இல்லாத சசிகலாவை எப்படி கட்சியில் இணைக்க முடியும்? அது முழு சோற்றில் பூசணிக்காயை மறைப்பதற்குச் சமம். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி இணைந்ததுதான் 90 சதவீத இணைப்பு என்று சசிகலா கூறுகிறார். அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை.
தமிழகத்தில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில் முழுமையான விவரங்கள் தெரியவேண்டும் என்றால் சிபிஐ விசாரணை தேவைப்படுகிறது. காவல் துறை அதிகாரிகளை மாற்றுவது பிரச்சினைக்கு தீர்வல்ல. முதல்வர் ஸ்டாலினையே மாற்ற வேண்டும். அப்போதுதான் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும்.
அண்ணாமலை என்ற வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது. நான் லுங்கி அணிந்து கொண்டு பேட்டி அளிக்கிறேன் என அண்ணாமலை கூறியிருக்கிறார். லுங்கி அணிந்து கொண்டு பேட்டி அளிப்பது ஒன்றும் அவ்வளவு அவமரியாதை கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.