ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கிய எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் அவரது வீடு அருகே கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மறைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் சரணடைந்தனர். இவர்கள் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனுமதிக்குமாறு போலீஸார் முறையிட்டனர். அதன்படி நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு காணொலி வாயிலாக இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திட்டத்தை வகுத்துக்கொடுத்தது யார் என்பது தொடர்பாக தீவிரமாக விசாரிக்க, கைதான 11 பேருக்கும் 5 நாள்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.