அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த தமிழக ஆம் ஆத்மி நிர்வாகிகள்!

தமிழக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் நேற்று இணைந்தனர். அவர்களுக்கு பாஜக உறுப்பினர்அட்டையை வழங்கி அண்ணாமலை வரவேற்றார்.

டெல்லி அரசின் மதுபான கொள்கைமுறைகேடு வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மிகட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அக்கட்சியில் இருந்து விலகி பலர் டெல்லியில் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

தமிழக ஆம் ஆத்மி கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் டி.கே.தமிழ்நெஞ்சம் தலைமையில் 40 நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளர் சரவணன் உள்பட வடசென்னை, தென் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தேனி, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் நேற்று இணைந்தனர். அவர்களுக்கு பாஜக உறுப்பினர்அட்டையை வழங்கி அண்ணாமலை வரவேற்றார்.

இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் டி.கே.தமிழ்நெஞ்சம் தலைமையில், தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பிரதமர் மோடியின் ஆளுமைத் திறனாலும், தலைமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்வதோடு, வலிமையான பாரதம், வளர்ச்சியடைந்த தமிழகம் என்ற நமது குறிக்கோளை நோக்கி அயராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.