வழக்கு என சொல்லி அண்ணாமலை என்னை மிரட்ட முடியாது: செல்வப்பெருந்தகை!

எல்லோரையும் மிரட்டுவதுபோல வழக்கு என சொல்லி என்னையும்மிரட்ட முடியாது என்று அண்ணாமலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது:-

எல்லா வழக்குகளையும் பார்த்தவன். மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும். எல்லோரையும் மிரட்டுவதுபோல என்னையும் அண்ணாமலை மிரட்டிக் கொண்டிருக்கிறார். எனது வழக்கின் தன்மை பற்றி அவருக்கு தெரியவில்லை. எங்கள் மீது வழக்கு பதிவு செய்தபோது ‘நீங்கள் சாதாரண நகர காவல்துறை, இதற்கு மேல் உயர் அதிகாரிகள், சிபிசிஐடி, சிபிஐ வலுவான அமைப்புகள் இருக்கிறது’ என சொல்லி வழக்கை சந்தித்தோம். அந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றும்படி உயர் நீதிமன்றத்தில் அப்போதைய மூத்த வழக்கறிஞராக இருந்த எனது வழக்கறிஞர் சந்துருதான் வாதாடினார். உடனே நகர காவல்துறை சிபிஐ விசாரிக்க தேவையில்லை. நாங்களே வழக்கை வாபஸ்பெற்றுக் கொள்கிறோம். இல்லாவிட்டால் நீதிமன்றமே இந்த வழக்கை ரத்து செய்யலாம் என்று தெரிவித்தனர்.

அந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை அண்ணாமலை படிக்க வேண்டும். இந்தியாவில் எங்கும் இதுபோல நடந்ததில்லை. வழக்கு போட்டது காவல்துறை. யார் மீது வழக்குப் பதியப்பட்டதோ அவரே சிபிஐ விசாரிக்கட்டும் என தெரிவித்தார். அவ்வாறு கூறியதும் வழக்கை காவல்துறை திரும்பப்பெற்றது. இந்த வழக்கின் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை இதில் பதிவிடுகிறேன். அதை படித்து உண்மையை தெரிந்து கொண்டு அண்ணாமலையிடம் நண்பர்கள் கேளுங்கள். இவ்வாறு வீடியோவில் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.