அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை வரும் ஜூலை 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் செந்தில்பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியும், விசாரணைக்கான காலக்கெடு குறித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கேட்டும், செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் மனு தாக்கல் செய்த அமலாக்கத்துறை, செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த ஜூலை 10ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை வேறு தேதிக்கு மாற்றி வைக்குமாறு அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இன்றும் நாளையும் மற்றொரு வழக்கில் ஆஜராக இருப்பதால் வழக்கை ஒத்திவைக்குமாறு கோரினார். இதற்கு செந்தில் பாலாஜி வழக்கறிஞர் அமலாக்கத்துறை வேண்டுமென்றே வழக்கை நீட்டிப்பதாக குற்றம்சாட்டினார். எனினும் துஷார் மேத்தாவின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைக்கு (ஜூலை 12) ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 22ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த நிலையில் அமலாக்கத்துறையின் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஏற்கெனவே மனுத்தாக்கல் செய்து இருந்தார். இதனிடையே எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை சுட்டிக்காட்டி இந்த வழக்கை தள்ளி வைக்க கோரி மேலும் ஒரு மனுவை சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி அல்லி, வழக்கை தள்ளிவைக்க கோரி தாக்கல் செய்த மனுவினை தள்ளுபடி செய்தது உடன், அமலாக்கத்துறை தொடர்ந்து உள்ள வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான வழக்கில் வரும் ஜூலை 16ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என கூறி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.