திராவிட ஆட்சியில் சாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுவதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிட மக்கள் நலன் காப்பதில் தமிழகம் முன்னணி என பொய் தம்பட்டம் அடிப்பதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையால், பட்டியலின மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறது திமுக அரசு. தமிழகத்தில் இறந்துபோன பட்டியலினத்தவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு கூட செய்ய முடியாத அவலம் போன்றவை, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்றால், நானே அழைத்துச் சென்று காட்டுகிறேன்.
பட்டியலின மக்கள் வசிக்கும் அரசு மாணவர் விடுதியின் அவலம் சந்தி சிரிக்கிறது. படி உயர்வு, பரிசுத்தொகை உயர்வு என திமுகவின் கபட நாடகத்தை யாரும் நம்பப்போவதில்லை. சாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடும் போலி திராவிட மாடல் ஆட்சியில், இத்தனை அவலங்களை வைத்துக் கொண்டு ஆதிதிராவிட மக்கள் நலன் காப்பதில் தமிழகம் முன்னணி என பொய் தம்பட்டம் அடிப்பதா..? இவ்வாறு எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.