கூட்டணி என்பது எனது கோட்பாட்டில் இல்லை. அதேபோல, திராவிடக் கட்சிகளுடன் என்னால் கூட்டணி வைக்க முடியாது என்று சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-
நாகரிக அரசியல் தெரியாத திமுக, இழிவாகப் பேசுவதற்கு என்றே பேச்சாளர்களை வைத்திருந்தது. ஆனால், நாங்கள் சண்டாளர் என்று பேசிவிட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். எதிர்க்கட்சிகள் அவதூறு பேசினார்களா? அவதூறு பேசுவதில் ஆதித்தாயே திமுக தானே. இந்திரா காந்தியை திமுவினர் பேசாத அவதூறுகளா.. ஜெயலலிதா பற்றி திமுக பேசாத பேச்சுகளா.. எம்ஜிஆரை பற்றி திமுக எவ்வளவு கேவலமாக பேசியிருக்கிறார்கள். அதனால் நல்ல அரசியல் பற்றி பேசுவதற்கும், அடுத்தவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்கும் திமுகவுக்கு துளி கூட அருகதை கிடையாது.
சண்டாளன் என்ற வார்த்தை ஒரு சாதியை தான் குறிக்கிறது என்பது உண்மையிலேயே எங்களுக்கு தெரியாது. அடி சண்டாளி என ஒரு திரைப்பட பாடலே உள்ளது. அட சண்டாளா என்று எனது திரைப்படத்தில் வடிவேலு காமெடியில் ஒரு காட்சியே வந்திருக்கும். அந்த படம் ரிலீஸ் ஆன பிறகு தான் எனக்கு அந்த வார்த்தை ஒரு சாதியையும், சமூகத்தையும் குறிக்கிறது என்று தெரியும். சண்டாளன் என்று நாங்கள் பாடவே இல்லையே. அது ஏற்கனவே இருக்கின்ற பாடல். அதை எழுதி வெளியிட்டது அதிமுக தான்.
அதிமுக இந்தப் பாடலை வெளியிடும் போது, திமுக என்ன செய்து கொண்டிருந்தது? காதில் பஞ்சு வைத்து கொண்டு இருந்ததா?.. கருணாநிதியே சண்டாளன் என்ற வார்த்தையை சினிமாவில் பேசியிருக்கிறார். பாசப்பறவை படத்தில் கூட நீதிமன்ற காட்சியில் சண்டாளன் என்ற வார்த்தையை கருணாநிதி பயன்படுத்தி இருப்பார். அது மட்டுமா? சேது சமுத்திர திட்டத்தை கெடுத்தது எந்த சண்டாளன் என்றும் கருணாநிதி தான் கேள்வி கேட்டிருப்பார்.
ஏதோ சண்டாளன் என்ற வார்த்தையையே நானும், சாட்டை துரைமுருகனும் கண்டுபிடித்தது மாதிரி பேசுகிறீர்கள். நாமக்கல் கவிஞர் அந்த வார்த்தையை பயன்படுத்தி பாடலை பாடியிருக்கிறார். சங்க இலக்கியம் முழுவதிலும் சண்டாளன் என்ற வார்த்தை வருகிறது. கந்த சஷ்டி பாடலிலும் சண்டாளன் என்ற வார்த்தை வருகிறது. எங்கள் மீது வழக்கு போட வேண்டும் என்றால், கந்த சஷ்டி பாடல் எழுதியவர் மீதும் வழக்கு போட வேண்டும். மேலும், கருணாநிதி மீது வழக்கு போட வேண்டும். அதையெல்லாம் போட்டுவிட்டு எங்கள் மீது வழக்கு போடுங்கள்.
குடிப்பெருமை பேசுவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார். திமுக கூட்டணியில் இருக்கும் அவருக்கு வெளிப்படையாக சவால் விடுகிறேன். அவரால் பொது தொகுதியில் நின்று வெல்ல முடியுமா, திமுகவிடம் ஒரு பொது தொகுதியைக்கூட வாங்க முடியாத திருமாவளவன், 16 பொது தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட என்னை சாதிப்பெருமை பேசுவதாகக் கூறுகிறார்.
கூட்டணி என்பது எனது கோட்பாட்டில் இல்லை. அதேபோல, திராவிடக் கட்சிகளுடன் என்னால் கூட்டணி வைக்க முடியாது. ஒருவேளை கூட்டணி அமைந்தால், அது மாற்றாக இல்லாமல், ஏமாற்றமாக இருக்கும். இவ்வாறு சீமான் கூறினார்.