தான் இயக்கியுள்ள ‘டீன்ஸ்’ படத்துக்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து இயக்குநர் பார்த்திபன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பார்த்திபன் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
சத்தியமா சொல்றேன், TEENZ-க்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்னா, நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன்.
இப்ப நீங்க எல்லாரும் ஒருமுகமா குடுக்குற பாராட்டுல நான் ‘ஓ’ன்னு சந்தோஷத்தில அழுவுறது உங்களுக்கு கேக்க வாய்ப்பே இல்லே. இது போதாது.. இன்னும் ஆதரவு தந்து பலரும் பாக்க உதவி செஞ்சி என்னை சந்தோஷத்தில சாகடிங்க. அடுத்த தலைமுறை ரசிக்கும் படியும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட இப்படம் பள்ளிகளும் கல்லூரிகளும் இல்லங்களும் கொண்டாட வேண்டும். நன்றி: பார்வையிட்டவர்களின் பாதங்களுக்கு, வரம்: வரவிருக்கும் தூய்மையான வெற்றி. இவ்வாறு பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.
பார்த்திபன் இயக்கியுள்ள ‘டீன்ஸ்’ படம் கடந்த ஜூலை 12-ல் திரையரங்குகளில் வெளியானது. குழந்தைகளை மையமாக கொண்ட இப்படம் சாகச த்ரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். காவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்துள்ளார். பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகி உள்ளது.