மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி வட சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க ஒற்றுமை நடைபயணம் நேற்று நடைபெற்றது.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் பேசுகையில், “மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் அவரவர் சொந்த மாவட்டங்களில் மத நல்லிணக்க ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார். வடசென்னையில்.. இதனடிப்படையில் வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மத நல்லிணக்க நடைபயணத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் ராஜீவ்காந்தி சிலை அருகில் நடைபெற்ற நடைபயண தொடக்க விழாவிற்கு வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெ.டில்லி பாபு தலைமை தாங்கினார். அதையடுத்து மத நல்லிணக்க ஒற்றுமை நடைபயணத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, மாநில நிர்வாகிகள், கலந்துகொண்டனர். இந்த நடைபயணம் கொடுங்கையூரில் தொடங்கி மகாகவி பாரதி நகர், சத்தியமூர்த்தி நகர், வியாசர்பாடி மார்க்கெட், பெரம்பூர் ரயில் நிலையம் வரை சுமார் 12 கிலோ மீட்டர் நடைபெற்றது.
விழிப்புணர்வு பிரச்சாரம்: நடைபயணத்தைத் தொடங்கி வைத்த செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இதுபோன்ற நடைபயணத்தை காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள், வட்டாரத் தலைவர்கள், நகரத் தலைவர்கள் அவரவர் பகுதியில் நடத்துவார்கள். காமராஜர் பிறந்த தினத்தையொட்டி இந்த நடைபயணம் தொடங்கப்பட்டுள்ளது. வரும் அக்.2-ம் காந்தி பிறந்த நாளில் மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் மத நல்லிணக்க நடைபயணம் நடைபெறும். மக்களிடையே அன்பு, மத நல்லிணக்கம், போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் உள்ளிட்ட பல செய்திகளை கொண்டு செல்வோம்’’ என்றார்.