பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு தொடர்பாக தேசிய பட்டியலின ஆணைய உறுப்பினர் சென்னையில் நேற்று விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக ஆட்சியர் உள்ளிட்டோருடனும் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி, பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, கைதான திருவேங்கடம் என்பவர் கடந்த 13-ம்தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். முன்னதாக இந்த விவகாரத்தை தேசிய பட்டியலின ஆணையம், மனித உரிமைகள் ஆணையத்தின் பார்வைக்கு தமிழக பாஜக எடுத்துச் சென்றது.
அதே நேரம், இந்த கொலை தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையமும் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தது. இது தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கும்படி, தமிழக அரசின்தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக விசாரிக்க தேசிய பட்டியலின ஆணைய உறுப்பினர் வடபள்ளி ராமச்சந்தர் நேற்று சென்னை வந்தார். அவர் அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் அவரது மனைவி பொற்கொடியிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார். அவரிடம் காவல் துறையின் விசாரணை உள்ளிட்ட விவரங்கள் குறித்து அரைமணி நேரத்துக்கும் மேலாக பேசினார்.
பின்னர், பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் ராமச்சந்தர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காவல்துறையினரிடம் எங்கெங்கு சிசிடிவி உள்ளது, நடந்த சம்பவங்களை விவரிக்குமாறு தகவல்களை கேட்டு பெற்றார். இதையடுத்து, சென்னை, சேப்பாக்கத்தில் ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, ஆதி திராவிடர் நலத் துறைச் செயலர் லஷ்மிபிரியா, வடசென்னை காவல் கூடுதல் ஆணையர் நரேந்திர நாயர் உள்ளிட்ட காவல் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாரிடம் பேசினேன். இந்த விவகாரத்தில் காவல்துறை முன்னெச்சரிக்கையாக இல்லை. தமிழக காவல் துறை தோல்வி அடைந்துவிட்டது. தற்போது நடைபெற்றுவரும் விசாரணை மீது திருப்தி இல்லை. முக்கியமாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 5 நாட்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளுடனான கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளோம். குறிப்பாக பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமை தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினோம் என்றார்.