கர்நாடக அரசை கண்டித்து ரயில் மறியல்: விவசாயிகள் கைது!

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் 1,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசையும், நீர் திறக்க நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பதாக குற்றம்சாட்டி மத்திய அரசையும் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில், ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், முன்னாள் எம்எல்ஏ கே.உலகநாதன் உள்ளிட்ட 65 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல, பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 67 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் நீர்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் உட்பட 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில், விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து உட்பட 1,300 பேர் என டெல்டா மாவட்டங்கள் முழுவதும் போராட்டங்களில் கலந்துகொண்ட 1,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.