மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்தை 4.83 % அளவுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று உயர்த்தியுள்ளது. அதன்படி, இதுவரை யூனிட் ஒன்றுக்கு 4.60 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் அது 4.80 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணம் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் மீண்டும் 4.83% கூடுதல் மின் கட்டணம் மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. மக்கள் தலையில் பேரிடியாக இறங்கியுள்ள இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதுடன், மாதாந்திர மின் கட்டண கணக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

மின் வாரியத்தின் கடன் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, பல்வேறு நிபந்தனைகளை ஏற்கவேண்டுமென வெளிப்படையான நிர்ப்பந்தங்களை மத்திய அரசு மேற்கொள்கிறது. இப்போதும் ஆர்டிஎஸ்எஸ் திட்டத்தில் மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு கட்டண உயர்வு கட்டாயம் என்பதை மின் வாரியம் தனது விளக்கத்தில் முன்வைத்துள்ளது. புதிய மின் உற்பத்தி திட்டங்களை அரசே செயல்படுத்தி குறைந்த கட்டணத்தில் மின் விநியோகம் செய்வதுதான் தமிழகத்துக்கு தேவையான மின் கொள்கையாகும். ஆனால் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவது, அதனால் கூடுதல் கட்டணம் விதிப்பது அல்லது கடன் வாங்குவதன் மூலம் அந்த நெருக்கடியை சமாளிப்பது என்ற முறையில் மின் வாரியம் தமிழக மக்களுக்கு சுமையை ஏற்றுகிறது.

வணிக இணைப்பு, சிறு குறு தொழில்களுக்கான இணைப்பு என எதுவாக இருந்தாலும் அந்தச் சுமையை ஏதோ ஒரு வகையில் மக்களேதான் சுமக்க நேரிடும். சிறு உற்பத்திப் பொருட்களின் விலையில் இந்தச் சுமை ஏற்றப்பட்டால் சந்தையில் போட்டிச் சூழலில் தமிழக நிறுவனங்கள் பின்தங்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். மத்திய அரசின் தனியார்மய சூழ்ச்சித் திட்டத்தை பின்னுக்குத் தள்ளுவதுடன், கடந்த காலங்களில் ஊழல் முறைகேடுகளால் ஏற்றப்பட்ட கடன் சுமையை, அதற்கு காரணமான அதானி உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்தே அபராதத்துடன் வசூலித்து அரசு கருவூலத்துக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.