கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் ஒப்பந்தத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தமாவது தெரிவிக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து தொகுப்பில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு தமிழக அரசு தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் ஒப்பந்தத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காழ்ப்புணர்ச்சியுடன் அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளார். ஆதாரங்களுடன் சொன்னால் நிச்சயம் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரம் இருந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்திருக்கப்படும். குறைகள் இருந்தால் களையப்படும். அதைவிடுத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம்.
தற்போது கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் ஒப்பந்தம், அண்ணாமலை கூறியது போல, அனிதா டெக்ஸ்கார்ட் நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை. பாலாஜி சர்ஜிக்கல் என்ற நிறுவனத்துக்கு வழங்ப்பட்டுள்ளது. எனவே, ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்ததற்கு அண்ணாமலை நாகரிகமான முறையில் வருத்தமாவது தெரிவிக்க வேண்டும் அல்லது துறையின் அடிப்படையில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.