மின்கட்டண உயர்வினை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: சீமான்!

அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் மின்கட்டண உயர்வினை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் 21ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியுள்ளார்.

திமுக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள உயர்த்தப்பட்ட மின்கட்டண அறிவிப்பின்படி, பொதுமக்கள் 400 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு மின்அலகு ஒன்றுக்கு ரூ.4.60 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், தற்போது ரூ.4.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 401 மின்அலகு முதல் 1000 மின்அலகு வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம் மின்அலகு ஒன்றிற்கு 50 காசுகள் வரை சீராக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 40 காசுகளும், கிராமப்புற குடிசை வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 45 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி வேளாண் மற்றும் அரசு விதைப்பண்ணைகள், விசைத்தறி, கிராம ஊராட்சி மன்றங்கள், சிறு குறு தொழில்நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் முதல் பாதுகாப்புபடை வீரர்களின் குடியிருப்புகள் என அனைத்திற்கும் ஏறத்தாழ 5 விழுக்காடு அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது

மக்களை வாட்டிவதைக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, மின்கட்டணத்தை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கணக்கிடும் முறையைக் கைவிட்டு, ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்தும் முறையை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் மின்கட்டண உயர்வினை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களை வாட்டிவதைக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் 21ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட தலைநகரங்களில் சட்டம் ஒழுங்கு சீரழிவு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெறும் எனவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.