ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் நவாஸ் கனி வெற்றியை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு!

ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ்கனி வெற்றியை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ்கனி ஏணி சின்னத்தில் போட்டியிட்டார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணி ஆதரவுடன் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். அதிமுக சார்பில் ஜெயபெருமாள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திர பிரபா மைக் சின்னத்தில் போட்டியிட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் பெயரிலேயே 5 பேர் சுயேச்சையாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டனர். இது பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தி இருந்தது. கடந்த ஜூன் 4 ஆம் தேதி லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் நவாஸ் கனி வெற்றி பெற்றார். சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம் இரண்டாம் இடம் பிடித்தார். 1,66,785 வாக்குகள் வித்தியாசத்தில் ஓபிஎஸ்ஸை வீழ்த்தி வென்றார் நவாஸ் கனி.

இந்நிலையில் நவாஸ் கனியின் வெற்றியை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஐ.யூ.எம்.எல் சார்பில் போட்டியிட்ட நவாஸ் கனி தனது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைத்திருப்பதாக கூறி, எனவே அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் வெற்றி குறித்து ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும் எனில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 45 நாட்களுக்குள் வழக்கு தொடர வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி, இன்று ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியின் வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்காக நேரில் வந்திருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், “பிரிந்து கிடக்கும் அதிமுக இணைய வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதிமுகவில் இணைத்துக் கொள்ளுங்கள் என்று நாங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கவில்லை, அவராக கேட்டு அவரே பதில் சொல்கிறார். சசிகலா பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.