மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 12 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் எல்லைக்கு அருகே உள்ள வண்டோலி கிராமத்தில் உள்ள வனப் பகுதியில் உள்ளூர் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த 12 முதல் 15 பேர் முகாமிட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அவர்கள் நாசகார செயல்களில் ஈடுபட திட்டமிட்டதாக தெரியவந்தது. இதையடுத்து, சி-60 படையின் 7 பிரிவுகள் காவல் துறை கண்காணிப்பாளர் விஷால் நாகோர்கோஜே தலைமையில் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேடுதல் வேட்டையின்போது போலீஸாரை நோக்கி மாவோயிஸ்ட்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். கடந்த 17-ம் தேதி மதியம் போலீஸார் தொடங்கிய பதிலடி தாக்குதல் 6 மணி நேரம் வரை நீடித்தது. இந்த என்கவுன்ட்டரில் 5 பெண் நக்சலைட்கள் உட்பட 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களது தலைக்கு மகாராஷ்டிர அரசு ரூ.86 லட்சம் பரிசு அறிவித்திருந்தது என மாவட்ட எஸ்பி நீலோத்பால் தெரிவித்தார்.