கோண்டா ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் கோண்டா பகுதியில் நேற்று மதியம் 2.35 மணிக்கு சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் திடீரென தடம் புரண்டது. இதில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கோண்டா ரெயில் விபத்து தொடர்பாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:-
உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவில் இன்று நடந்த மற்றொரு சோகமான ரெயில் விபத்து குறித்து அறிந்து வருத்தமடைகிறேன். மற்றொரு ரெயில் தடம் புரண்டது. இந்த முறை சண்டிகர்-திப்ரரூகர் எக்ஸ்பிரஸ். ரெயில்வே அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? என்ன செய்கிறது இந்திய அரசு? பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அரசுக்கு எப்போது புத்தி வரும்? விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.