மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளதாகவும், சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் மூன்று புதிய கிரிமினல் சட்டங்கள் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. இந்தச் சட்டங்களின் பல பிரிவுகளுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எந்த விவாதமும் இன்றி இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அமலுக்கு வந்தது. இதனால் எதிர்க்கட்சிகள், சமுக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த சட்டங்களில் சட்டப்பிரிவுகள் எல்லாமே மாற்றப்பட்டிருப்பதும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக உள்ளது. 1860-ஆம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பாரதீய நியாய சன்ஹிதா (BNS) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோல் 1973-ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக (CrPC) பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) என்று மாற்றப்பட்டது. 1872-ஆம் ஆண்டின் இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) என்ற சட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது.
புதிய சட்டங்கள் அனைத்தும் 2023ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசால் இயற்றப்பட்டவை ஆகும். இந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் செய்யப்படும் குற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டதுடன், அதற்கு முந்தைய குற்றங்களுக்கு பழைய சட்டத்தின்படியே வழக்குகள், விசாரணைகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 348வது பிரிவு, சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். ஆனால், இந்த மூன்று சட்டங்களுக்கும் இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளன. இதற்கு கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. புதிய குற்றவியல் சட்டங்களை தமிழகத்தை ஆளும் திமுக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது இந்தச் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பின் கூட்டுப் பட்டியல்-3-இல் இடம்பெறுவதால், மாநில அரசுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கூறும் தமிழக அரசு, அப்படி ஏதும் நடக்காமல், மாநிலங்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படாமல் இச்சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. பிஎன்எஸ் மற்றும் பிஎன்எஸ்எஸ் -இன் பல பிரிவுகள் தெளிவற்றவையாகவும் முரண்பாடுகளுடன் இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு விமர்சித்து இருந்தது.
இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமலுக்கு வந்துள்ள இந்த சட்டங்களை அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து, அவற்றை ரத்து செய்யக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுக்களில், நாடாளுமன்றத்துக்குள் கண்ணீர் புகை குண்டு வீசிய சம்பவத்தை கண்டித்ததால், இரு சபைகளில் இருந்தும் 150 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், எந்த விவாதமும் இல்லாமல் இந்த சட்டங்கள் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் ஆலோசனைகளைப் பெறாமல், சில பிரிவுகளை மாற்றம் செய்து, சட்டங்களை சமஸ்கிருதமயமாக்கி உள்ளதாகவும், இது பல தரப்பினருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில், அரசு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை குற்றமாக்கியுள்ளதாகவும், குற்றங்களுக்கு தண்டனைகளை அதிகரித்துள்ளதாகவும், ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் எனக் கூறியுள்ளதன் மூலம், தண்டனை குறைப்பு வழங்கும் குடியரசு தலைவர், ஆளுநரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தில், காவல் துறையினருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கொலை, ஆசிட் வீச்சு வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களுக்கு கைவிலங்கு பூட்டுவதன் மூலம் தனிநபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் , நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அரசியலமைப்பு சட்டப்படி ஆங்கிலத்தில் மட்டுமே சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், சமஸ்கிருதத்தில் சட்டங்களை நிறைவேற்றியது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என வாதிட்டார். வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுத்தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் ஆஜராகி கேட்டுக் கொண்டார். இதையடுத்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளதாகவும், சிஆர்பிசி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த போதும் இதேபோல எதிர்ப்பு இருந்தது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுடன் பட்டியலிட உத்தரவிட்டனர்.