அம்மா உணவகத்தை ஒரு நாள் ஆய்வு செய்தால் போதுமா?: ஜெயக்குமார்!

அம்மா உணவகத்தை ஒரு நாளைக்கு முதல்வர் ஸ்டாலின் போய் ஆய்வு செய்துவிட்டால் போதுமா? அதுல எவ்வளவு பிரச்சினை இருக்கிறது என்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கியுள்ளார்.

எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கிடும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த உணவகங்கள் மூலம் குறைந்த விலையில் உணவு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார். அப்போது உணவகத்தில் சாப்பிடுபவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அம்மா உணவகத்தின் சமையலறை, உணவுக் கூடத்தை தூய்மையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் முதல்வரின் ஆய்வு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

இந்த திறனற்ற ஆட்சியில் அம்மா உணவகம் பெரும்பாலான இடங்களில் பெயர் பலகையளவில் தான் இயங்கி வருகிறது. அம்மா உணவகத்தால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது என்று கூறியது இதே ஸ்டாலின் அரசு தான்! எவ்வளவு நிதி செலவானாலும் எளிய மக்கள் பசியாறட்டும் என்று உத்தரவு போட்டவர் அம்மா! ஆட்சிக்கு வந்தவுடனே அம்மா உணவகத்தை திமுகவினர் அடித்து நொறுக்கினர். பின்னர் வேலை ஆட்கள் குறைப்பு,உணவு வகைகளை குறைத்தல்,பழுதடைந்த இயந்திரங்கள் மற்றும் நிதி ஒதுக்காமல் என பல வழிகளில் அம்மா உணவகங்கள் அழிவை நோக்கி தள்ளியது திமுக அரசு! இந்த திமுக ஆட்சியில், பேருந்திற்கு பணமிருந்தால் போதும் அம்மா உணவகத்தில் உணவிருக்கும் என தன் அம்மாவிடம் சொல்லி விட்டு சொந்த ஊரில் இருந்து வேலைக்கும் படிப்புக்கும் வரும் இளைஞர்களுக்கு ஏமாற்றமே இன்று மிச்சமாகியுள்ளது! நன்றாக சாப்பிட வேண்டிய வயதில் பொருளாதார சூழ்நிலையை கருதி டிபன் சாப்பிடாமல் டீ அருந்தும் அவல நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இத்தனைக்கும் அம்மா உணவகங்களை இந்த அரக்க குணம் கொண்ட அரசு செயல்படுத்தாமல் இருந்ததே காரணம்!

தங்கள் குடும்ப கம்பெனியின் தண்ணீர் பாட்டில் விற்பனை பாதிப்படையும் என்பதற்காக எளிய மக்களின் தாகம் தீர்க்கும் அம்மா குடிநீரை நிறுத்தியது நியாயமா? ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் அம்மா மடிக்கணினி நிறுத்தப்பட்டது ஏன்? அம்மா சிமெண்ட், அம்மா மருந்தகம், அம்மா மினிகிளினிக் என பல மக்கள் நல திட்டங்களை முடக்கி விட்டு பொய் வேடம் போடும் முதலமைச்சரின் இந்த நடிப்பிற்கு இந்தாண்டின் இறுதியில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது நிச்சயம் கிடைக்கும்! இவ்வாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.