அரபி குடும்பத்தினருக்கு விற்கப்பட்ட 3 கேரள பெண்கள் மீட்பு!

வளைகுடா சென்ற பெண்களை அங்கிருந்த ஒரு கும்பல் குவைத் நாட்டில் உள்ள சில அரபி குடும்பத்தினரின் வீட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர். மலையாள அமைப்புகள் வளைகுடா நாட்டின் அதிகாரிகளை சந்தித்து புகார் கொடுத்தனர். குவைத்தில் விற்கப்பட்ட 3 பெண்களும் மீட்கப்பட்டனர்.

கேரளாவில் இருந்து அரபு நாடுகளுக்கு வீட்டு வேலை செய்யவும், குழந்தைகள் பராமரிப்பு பணிக்காகவும் பல பெண்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள். இதுபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு வளைகுடா நாட்டில் அரபி குடும்பத்தினரின் குழந்தைகளை பராமரிக்கும் பணி காலியாக இருப்பதாகவும், அதற்கு பெண்கள் தேவைப்படுவதாகவும் கேரளாவை சேர்ந்த ஏஜெண்டு ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து கொச்சி, கொல்லம் பகுதிகளை சேர்ந்த பெண்கள் பலரும் அந்த ஏஜெண்டை தொடர்பு கொண்டனர். இதில் 3 பெண்களை அந்த ஏஜெண்ட் தேர்வு செய்து வளைகுடா நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

வளைகுடா சென்ற பெண்களை அங்கிருந்த ஒரு கும்பல் குவைத் நாட்டில் உள்ள சில அரபி குடும்பத்தினரின் வீட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அரபி குடும்பத்தினர், 3 பெண்களையும் அடிமைகள் போல் நடத்த தொடங்கினர். மேலும் அவர்களுக்கு சரியாக உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்தனர். இதுபற்றி அந்த பெண்கள், அரபி குடும்பத்தினரிடம் கேட்டபோது, 3 பேரும் அவர்களிடம் விற்கப்பட்டு விட்டதாகவும், இதற்காக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சம் வழங்கி இருப்பதையும் தெரிந்து கொண்டனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்கள் 3 பேரும் தங்களின் நிலைமையை கேரளாவில் உள்ள குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். மேலும் அங்கு அனுபவிக்கும் கொடுமைகளை வீடியோவாக பதிவு செய்து அதனை உறவினர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இதை பார்த்து பதறி துடித்த உறவினர்கள், பெண்களை வேலைக்கு அனுப்பி வைத்த கேரள ஏஜெண்டை தொடர்பு கொண்டு பெண்களை உடனடியாக கேரளாவுக்கு திரும்ப அழைத்து வர ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டனர். அதற்கு கேரள ஏஜெண்டு பெண்களை மீட்டு வரவேண்டும் என்றால் ஒவ்வொரு பெண்களுக்கும் தலா ரூ.3 லட்சம் வீதம் பணம் தந்தால் மீட்டு தருகிறோம் என பேரம் பேசினர். இதனை கேட்டதும் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், இதுபற்றி போலீசில் புகார் செய்வோம் எனக்கூறினர். அதற்கு ஏஜெண்டுகள், பணம் தராவிட்டால் குவைத்தில் இருக்கும் பெண்களை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் விற்றுவிடுவோம் என மிரட்டினர்.

இதை கேட்டு அதிர்ந்து போன பெண்களின் உறவினர்கள், இது பற்றிய தகவல்களை வளைகுடா நாட்டில் உள்ள மலையாள அமைப்புகளுக்கு தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் அனுப்பிய வீடியோக்களையும் அனுப்பி வைத்தனர். இதையடுத்து மலையாள அமைப்புகள் வளைகுடா நாட்டின் அதிகாரிகளை சந்தித்து புகார் கொடுத்தனர். அவர்களின் நடவடிக்கையால் குவைத்தில் விற்கப்பட்ட 3 பெண்களும் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பத்திரமாக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கேரளா திரும்பிய பெண்கள், இது பற்றி எர்ணாகுளம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் பெண்களை வேலைக்கு அனுப்பி வைத்த ஏஜென்டு அஜிமோன் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் அஜிமோன் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு செய்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்களை பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே கேரளாவுக்கு மீட்டு வரப்பட்ட பெண்கள் கூறும்போது, எங்களை போல் மேலும் பல பெண்கள் குவைத் நாட்டில் விற்கப்பட்டு உள்ளனர். இவர்களில் வடமாநிலத்தை சேர்ந்த இந்தி பேசும் சில பெண்களும் உள்ளனர். நாங்கள் மீட்கப்பட்டதும் அந்த பெண்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர். அவர்களையும் மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினர்.