மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 20 வது ஆண்டு நிறைவு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்றிருந்தார். அவர் ஆற்றிய சிறப்புரையில் மதுரை தூங்கா நகரமாக இருந்து இங்கு வரும் மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளையும், அன்பான விருந்தோம்பலையும் வழங்குகிறது என்று கூறியுள்ளார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை 2004 ஜூலை 24 ல் துவக்கப்பட்டது. இதன் 20 வது ஆண்டு நிறைவு விழா இன்று காலை 9:30 மணிக்கு மதுரையில் தொடங்கியது. விழாவை துவக்கி வைத்து 20 ஆண்டை குறிக்கும் நினைவுத் தூணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மதுரை நகரை பெருமையாக குறிப்பிட்டார். அதேபோல அவ்வையாரின் ஆத்திச்சூடியையும் அவர் மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். காலை வணக்கம் என தமிழில் சந்திரசூட் தனது உரையை தொடங்கினார், அவர் மேலும் பேசியதாவது:-
நான் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை கொண்டவன். ஆனால், தொழில்நுட்பத்தை நம்பியிருப்பதால் ஏற்படும் தீய விளைவுகளை நேற்றுதான் பார்த்தோம். விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் மதுரை மக்களின் அன்புதான் இன்று இங்கு என்னை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று நினைக்கிறேன். கடந்த ஆண்டு என்னுடைய மதுரை பயணத்தை நினைத்து பார்க்கையில், தமிழ் புலவர் அவ்வையார் எழுதிய ஆத்திச்சூடியின் முதல் 3 பத்திகள் என் நினைவுக்கு வருகின்றன. ‘நல்ல செயல்களைச் செய்ய ஆசைப்பட வேண்டும், கோபத்தைக் குறைக்க வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும், மேலும் உங்களால் முடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்’ என்பதுதான் அது. இது நீதிக்கான வேட்கையின் அடையாளமாக இருக்கிறது. முதல் எண்ணம் நீதியின் உணர்வைத் தருகிறது. இரண்டாவதாக அவ்வையார் கோபத்தைக் கட்டுப்படுத்தச் சொல்லும்போது, நீதியை வழங்குவதற்கு உணர்ச்சி சமநிலை உணர்வை வேண்டும் என்பதை தெளிவுப்படுத்துகிறது. மூன்றாவதாக பிறருக்கு உதவுங்கள் என்பது, இரக்க குணத்தை போதிக்கிறது. இரக்கம் எல்லாமல் எங்கள் வேலையை செய்ய முடியாது.
கடந்த முறை என்னுடைய மதுரை பயணத்தில் நான் சந்தித்த மக்கள் அனைவரும் மேற்குறிப்பிட்டத்தை அவர்கள் வாழ்வியலில் பின்பற்றி தமிழ் கலாச்சாரத்தின் நன்மதிப்பை எனக்கு உணர்த்தினார்கள். மதுரை தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் இங்கு சந்தை எப்போதும் மக்களுக்காக திறந்திருக்கிறது. மதுரைக்கு வரும் மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை இந்நகரம் வழங்குகிறது. மதுரையின் வரவேற்பும், விருந்தோம்பலும் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. நீதித்துறை என்று வரும்போது மக்கள் நீதிமன்றத்தை அனுகுவதில் இரண்டு பெரிய தடைகளை எதிர்கொள்கின்றனர். ஒன்று, மொழிப்பிரச்னை. இரண்டாவது தூரம். ஆனால் இது இரண்டையும் மதுரை தகர்த்திருக்கிறது. இதுவரை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் சுமார் 2000 தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கின்றன. பிராந்திய மொழியில் தீர்ப்புகள் வரும்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளாகிய நாங்கள் சாமானிய மக்களிடம் நேரடியாக சென்று சேர்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.