தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் தலைமையில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பேசிய பா. ரஞ்சித், “ஆம்ஸ்ட்ராங் அண்ணனை நீங்கள் வீழ்த்தியிருக்கலாம். ஆனால் அதற்காக எங்களை மீறி மெட்ராஸை யாராலும் ஆள முடியாது” என பா. ரஞ்சித் கூறினார்.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி ரவுடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேசியக் கட்சியின் தலைவர் நடு வீதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தமிழகத்தையும் தாண்டி நாடு முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முதலில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, தலித் தலைவர்களையும், தலித் மக்களையும் திமுக அரசு பாதுகாக்கவில்லை என திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். மேலும், தலித் மக்கள் பெரும்பாலானோர் திமுகவுக்கு வாக்களிப்பதாகவும், ஆனால் தலித் மக்களின் பிரச்சினைகளை இரண்டாம் தரமாகவே திமுக அணுகுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஜூலை 20-ம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து மாபெரும் பேரணி நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.
அந்த வகையில், சென்னை எழும்பூரில் நேற்று மாலை இயக்குநர் பா. ரஞ்சித் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு பிறகு பா. ரஞ்சித் பேசியதாவது:-
இந்தக் கூட்டம் எனக்காக வந்த கூட்டம் அல்ல.ஆம்ஸ்ட்ராங்கிற்காக வந்த கூட்டம். யாரும் காசு கொடுத்து இந்தக் கூட்டத்தை கூட்ட முடியாது. காசுக்காகவும் யாரும் இங்கு வரவில்லை. திமுக மீது குற்றம் சுமத்துவதற்காக இந்த பேரணியை நாங்கள் நடத்துவதாக சிலர் ஊடகங்களில் கூறி வருகின்றனர். அரசுக்கு எதிரான பேரணி அல்ல இது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதை அரசுக்கு உணர்த்துவதற்காக நடத்தப்படும் பேரணி இது.
ஆம்ஸ்ட்ராங்கை ரவுடி என சில அயோக்கியர்கள் சமூக வலைதளங்களில் எழுதுகிறார்கள். அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர் ஆம்ஸ்ட்ராங். அடக்க நினைப்பவர்களுக்கு அடிபணிய மறுத்தவர் ஆம்ஸ்ட்ராங். அப்படி இருந்தால் ரவுடி எனக் கூறுவீர்களா? அப்படியென்றால் நாங்களும் ரவுடிகள் தான். ஆம்ஸ்ட்ராங் படுகொலையை எளிதில் கடந்துவிடலாம் என நினைத்து விடாதீர்கள். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் பல சூழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. சென்னையை பொறுத்தவரை ஆம்ஸ்ட்ராங்கை மீறி எதுவும் நடக்காது. யாராலும் எதுவும் செய்ய முடியாது. சென்னையில் மட்டும் 40 சதவீதம் தலித் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் அரசியலற்று கிடக்கிறோம். ஒரு நாள் நாங்களும் அரசியல் உடையவர்களாக மாறுவோம். அப்போது நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கும் காலம் வரும்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த சென்னை மேயர் பிரியா, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் குரல் கொடுக்காமல் இருப்பது ஏன்? திமுகவில் இருப்பதால் நீங்கள் குரல் கொடுக்கவில்லையா? இடஒதுக்கீடு இருப்பதால் நீங்கள் மேயராகவும், அமைச்சராகவும் ஆகியிருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். தலித் சமூகத்தை சேர்ந்த எம்எல்ஏக்களும், எம்பிக்களும் எப்போதுதான் இதற்காக குரல் கொடுக்க போகிறீர்கள்? குரல் கொடுக்க முடியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள்.
நாங்கள் யாருக்கும் அடிமை கிடையாது. எங்களும் பயமும் கிடையாது. பயமில்லாமல் நாடாளுவோம். ஆம்ஸ்ட்ராங்கிற்கு சென்னையில் மணிமண்டபம் கட்ட வேண்டும். ஆம்ஸ்ட்ராங்கை வீழ்த்தி விட்டோம் என்பதற்காக மெட்ராஸை நீங்கள் ஆள முடியாது. மெட்ராஸ் என்றுமே எங்களுடையது. எங்களை மீறி யாராலும் மெட்ராஸை ஆள முடியாது.
திருமாவளனுக்கு எதிராக நாங்கள் ஒருநாளும் இருக்க மாட்டோம். உங்களை நாங்கள் ஒருநாளும் கைவிடமாட்டோம். பா.ஜனதாவுக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் எதிரானவர்கள் நாங்கள். நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டிய தேவை இருக்கிறது. இவ்வாறு பா. ரஞ்சித் பேசினார்.