ராமர் ஆட்சியில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் சமம் என்று இருந்தது. அப்படிதான் திமுக ஆட்சியும் தற்போது நடைபெற்று வருகிறது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை கம்பன் கழக நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-
ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகம் எதிர்காலத்தில் உருவாக வேண்டும்; இருக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன் உருவாக்கப்பட்ட காவியம்தான் ராமகாவியம்- கம்பராமாயணம் என்பதை நாம் இங்கே மனதில் வைத்துக் கொண்டாக வேண்டும். எனவே, இது ஒரு வித்தியாசமாகத்தான் இருக்கும் பாதிப்பேருக்கு. அதில் உள்ள பல நல்ல கருத்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். போற்றப்பட வேண்டும். எனவே வித்தியாசமான ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கின்ற போதுதான், இது எங்களுடைய திராவிட மாடலுக்கு பொருத்தமான ஒன்றாக இருக்கின்ற காரணத்தால்தான் ராமனை இன்றைய திராவிட மாடல் ஆட்சியினுடைய முன்னோடியாக நாங்கள் கருதுகிறோம்.
தந்தை பெரியாருக்கு முன்னால், பேரறிஞர் அண்ணாவுக்கு முன்னால், டாக்டர் அம்பேத்கருக்கு முன்னால், தலைவர் கலைஞருக்கு (கருணாநிதி) முன்னால் இன்று நம்முடைய நம் தளபதிக்கு (முதல்வர் மு.க.ஸ்டாலின்) முன்னால் இந்த திராவிட மாடல் ஆட்சி முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கக் கூடிய சமூக நீதியை, சமத்துவ சமூக நீதி இவற்றையெல்லாம் போதித்தவர்; எல்லோரும் சமம் என்று சொன்னவர் ஒரே நாயகன் ராமர். இதை யாரும் மறுக்க முடியாது. இதை மறுப்பதற்கான வாய்ப்பும் கிடையாது. ராமர் ஆட்சியின் நீட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக ஆட்சி. 2026 சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று யாருடைய தயவு இல்லாமல் மீண்டும் ஆட்சியை அமைக்கும். யாருடைய தயவையும் பெறும் சூழ்நிலையும் எங்களுக்கு வராது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி பேசினார்.
திராவிடர் இயக்கம் தொடர்ந்து ராமாயணத்தை விமர்சித்து வரும் நிலையில் தமிழக அமைச்சர் ரகுபதி, திராவிட மாடல் அரசையும் ராமரையும் ஒப்பிட்டு முன்னோடி என பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் ரகுபதி, திராவிட மாடல் கொள்கையில் கம்பன் எந்த அளவுக்கு ஈடுபட்டிருந்தார்; எந்த அளவுக்கு உடன்பட்டிருந்தார் என்பதைத்தான் நான் அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டேன். சமத்துவம், சமூக நீதி.. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதைத்தான் சொன்னேன். குகனோடு சேர்ந்து ஐவரானோம்; சுக்ரீவனோடு சேர்ந்து அறுவரானோம்; விபீடணனுடன் சேர்ந்து எழுவரானோம் என்று எல்லோரையும் தன்னோடு இணைத்துக் கொள்கிற அந்த சகோதர பாங்கை; எல்லோரும் தசரனுடைய குழந்தைகள் என்று சொல்கிற போது ராமர் அனைவரையும் சகோதரர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிற அந்தப் பக்குவம்தான் திராவிட மாடல் ஆட்சி. அதைத்தான் நாங்கள் முன்னிறுத்தி பேசினேன் என்றார்.