ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் ஒரே கட்சி திமுக: கனிமொழி!

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் பா. ரஞ்சித் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் திமுக அரசை கடுமையாக விமர்சித்த நிலையில், இதுதொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் ஒரே கட்சி திமுக என்று எல்லோருக்கும் தெரியும் எனவும் அவர் கூறினார்.

தமிழக பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி தனது வீட்டருகே ரவுடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் போலீஸார் 15-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களில் பாஜக முன்னாள் நிர்வாகியும், பெண் தாதாவுமான அஞ்சலை, திமுக நிர்வாகியின் மகன் சதீஷ், அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்க்கொடி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரிடமும் நடத்திய விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலையானது, ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்கும் விதமாகவே நடந்திருப்பதாக தெரிகிறது.

ஆனால், ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்களும், திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித்தும் இதை வேறுமாதிரியாக கூறி வருகின்றனர். அதாவது, ஆம்ஸ்ட்ராங்கை ஒரு ரவுடி போல சித்தரிப்பதற்காக போலீஸார் சதி செய்வதாகவும், அரசியல் ரீதியாகவே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தலித் தலைவர்களையும், தலித் மக்களையும் பாதுகாப்பதில் திமுக அரசு அலட்சியம் காட்டுவதாகவும் பா. ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்தும், இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் நேற்று முன்தினம் எழும்பூரில் பா. ரஞ்சித் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் பேசிய பா. ரஞ்சித், ஆமஸ்ட்ராங் கொலையை கண்டித்து திமுகவில் உள்ள தலித் எம்எல்ஏக்கள், மேயர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் குரல் கொடுக்காதது ஏன் என கேள்வியெழுப்பினார்.

இந்நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் சமூக நீதிக்கான முதல் ஓடிடி தளமான Periyar Vision-ஐ திமுக எம்.பி. கனிமொழி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவரிடம் பா. ரஞ்சித்தின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த கனிமொழி, “பா. ரஞ்சித் பேசிய விஷயத்திற்குள் நான் போக விரும்பவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர்கள் உடனிருந்து அவர்களுடன் சேர்ந்து போராடிக் கொண்டிருக்கும் ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு குற்றம் நடந்திருக்கிறது. அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தக் குற்றத்திற்கு காரணமாக இருந்தவர்களை சட்டத்திற்கு முன்பு நிறுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு” என கனிமொழி கூறினார்.