மத்தியப் பிரதேசத்தில் அரிய வகை டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த உலகத்தில் சுமார் 243 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் டேனாசர்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. டைனோசர் குறித்த ஆய்வுகளும் உலகெங்கும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் பல புதிய கண்டுபிடிப்புகள் நடந்து வருகிறது. அப்படி தான் டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தார் மாவட்டத்தில் உள்ள டைனோசர் புதை படிவ தேசியப் பூங்காவில் நடத்திய ஆய்வில் புதை படிவ டைனோசர் முட்டைகளின் தனித்துவமான தொகுப்பைக் கண்டுபிடித்துள்ளனர். முட்டைக்குள்- முட்டைகள் இருப்பது அரிய நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் இவை பறவைகளில் மட்டுமே நிகழும் அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற நிகழ்வுகள் ஊர்வனவங்களில் ஒருபோதும் கண்டறியப்பட்டது இல்லை. எனவே இந்த கண்டுபிடிப்பு ஊர்வன மற்றும் பறவை இனங்களுக்கு இடையே இருக்கும் புதிய தொடர்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்தின் பாக் என்ற பகுதியில் தான் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டைட்டானோசொரிட் டைனோசர் முட்டையில் முட்டைக்குள் முட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய இந்தியாவின் சில குறிப்பிட்ட பகுதிகளில் டைனோசர் புதை படிவங்கள் (எலும்பு மற்றும் முட்டை எச்சங்கள்) அதிகம் காணப்படும் இடங்களில் ஒன்றாகும். டெல்லியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் பாக் என்ற பகுதிக்கு அருகே உள்ள பாட்லியா கிராமத்தில் 52 டைட்டானோசொரிட் சாரோபாட் கூடுகளைக் கண்டுபிடித்தனர். இதில் ஒவ்வொரு கூடுகளிலும் 10 முட்டைகள் இருந்தது. அவற்றில் ஒன்று தான் இந்த “அசாதாரண” முட்டையாக இருந்தது. அந்த அரிய வகை முட்டையில் இரண்டு தொடர்ச்சியான மற்றும் வட்ட வடிவ முட்டை ஓடுகள் இருந்தன. இரு முட்டைகளும் சிறு இடைவெளியில் பிரிக்கப்பட்டது. இவை பொதுவாகப் பறவைகளில் மட்டுமே காணப்படும். இதுவரை டைனோசர்கள், ஆமைகள், முதலைகள் உள்ளிட்ட பிற ஊர்வனவற்றில் இதுபோன்ற முட்டைக்கள் முட்டை கண்டுபிடிக்கப்படவில்லை.
டைனோசர்களின் இனப்பெருக்க முறை ஆமைகளைப் போல இருக்கும் என்று நம்பப்பட்ட நிலையில், இப்போது பறவைகளில் காணப்படும் அரிய முறை கண்டறியப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. முதலைகள் போன்ற ஊர்வனத்தில் முட்டைகள் ஒரே சமயத்தில் இடப்படும். ஆனால் பறவைகளில் ஒவ்வொரு முட்டையாகவே இடப்படும். இது ஊர்வனத்திற்கும் பறவைகளுக்கும் இடையே முக்கிய வேறுபாடாக இருந்தது. இப்போது பறவைகளில் காணப்படும் முறை டைனோசரில் காணப்பட்டுள்ளது தான் புதிராக உள்ளது. இது பரிணாம வளர்ச்சிக்கே சவால் விடுவதாக அமைந்துள்ளது.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், “இந்த முட்டைக்குள் முட்டை கண்டுபிடிப்பு டைட்டானோசவுரிட்களில் உள்ள பறவைகளின் பண்புகளைக் காட்டுவதாக அமைந்துள்ளது. டைட்டானோசவுரிட் கூட்டில் இருந்து கண்டறியப்பட்டுள்ள இது சௌரோபாட் டைனோசர்கள் முதலைகள் அல்லது பறவைகளைப் போன்ற கருமுட்டை உருவ அமைப்பைக் கொண்டிருக்கலாம் என்பதைக் கூறுவதாக அமைந்துள்ளது” என்றனர்.