இளைய சமுதாயத்தினரின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கிறது: செல்வப்பெருந்தகை!

இளைய சமுதாயத்தினரின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

உச்ச நீதிமன்ற ஆணையின்படி நாடு முழுவதும் நடந்த நீட் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பல்வேறு குளறுபடிகள் அம்பலமாகியுள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு நெருக்கமான யுபிஎஸ்சி தலைவரான குஜராத்தை சேர்ந்த மனோஜ் சோனி ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இன்னும் 5 ஆண்டுகள் பதவி காலம் உள்ள நிலையில், அவர் விலகியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. யுபிஎஸ்சியில் நடந்திருக்கும் பல ஊழல்கள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளன. ஏராளமான ஊழல்களும், ராஜினாமாவுக்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்பது குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும்.

தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகளால் மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடந்துவருகிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. அதேபோல யுபிஎஸ்சியிலும் ஊழல்கள் வெளியாகி அதன் தலைவர் ராஜினாமா செய்திருக்கிறார். ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணி இடங்களை நிரப்புவதற்கான மத்திய பணியாளர் தேர்வாணையத்திலும் பல மோசடிகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதன்மூலம் ஏற்படுகிற விளைவுகளினால் இளைய சமுதாயத்தினரின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கிறது. இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.