ஆம்ஸ்ட்ராங் வழக்கு குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்தது ஏன்?: எச்.ராஜா!

காஞ்சிபுரம் அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்கர தத்த ஸ்ரீ பாதஸ்ரீ சாய் பீடத்தில், ஸ்ரீ திருவிக்ரம மகாதேவஞான வல்லப தத்தாத்ரேயர் மகா யாகம்நேற்று நடைபெற்றது. இந்த யாகத்துக்குமடத்தின் நிறுவனர் ஸ்ரீ லலிதா வல்லபாந்தமை தலைமை தாங்கினார்.இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கினால் தமிழகத்தில் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது. கட்டணம் இல்லாமல் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என சனதான தர்மம் கூறுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேளச்சேரியில் தனியார் பள்ளி வைத்துள்ளதால் மாணவர்களிடம் பள்ளி கட்டணமாக வாங்க முடியாது என்பதால் சாதனத்தை தொடர்ந்து எதிர்த்து பேசி வருகிறார். ஆகையால் தான் சனாதானத்தை கொசு டெங்கு போன்றவை அழிக்க வேண்டும் எனப் பேசி வருகிறார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏன் தமிழக காவல்துறை அவசர அவசரமாக திருவேங்கடத்தை கொலை செய்தது? ஜெயிலிலில் இருந்து வெளியே வந்த நபரிடம் எப்படி ஆயுதம் வந்தது? ஜெயிலில் இருந்து எப்படி அதிகாலை 5 மணிக்கு குற்றவாளி கொண்டு வரப்பட்டார்? உள்ளிட்ட பல்வேறு சந்தேகம் எழுந்து வருவதால் இது திட்டமிட்டபடி 100 சதவீத கொலைதான். இதில் ஆளும் கட்சியினர் தொடர்பு அதிகம் இருப்பதாக சந்தேகம் வருவதால் ஆரம்பகட்ட காலத்திலிருந்து எதிர்கட்சிகள் அனைவரும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.