ஆந்திரா, பிகார் தவிர மற்ற மாநிலத்தவர்கள் அல்வா சாப்பிடுங்கள்: பிரகாஷ்ராஜ்!

“ஆந்திரா, பிகார் பட்ஜெட் வெளியாகிவிட்டது. மற்ற மாநிலத்தவர்கள் மகிழ்ச்சியாக அல்வா சாப்பிடுங்கள்” எனப் பதிவிட்டு, இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை விமர்சித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி ஆமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 7வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் உற்பத்தி, வேலை வாய்ப்பு, சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 9 துறைகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆந்திரா, பிகார் ஆகிய மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த நிலையில் ஆந்திரா, பிகாருக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆந்திரா, பிகார் மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டிருப்பது எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் விமர்சனங்களைக் கிளப்பி உள்ளது. ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்டாக இருக்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் சமூக வலைதளத்தில் பட்ஜெட் குறித்து பதிவிட்டுள்ளார். ஆந்திரா, பிகார் பட்ஜெட் வெளியாகிவிட்டது. மற்ற மாநிலத்தவர்கள் மகிழ்ச்சியாக அல்வா சாப்பிடுங்கள் என கிண்டலாக பதிவிட்டு பட்ஜெட்டை விமர்சித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ், தொடர்ச்சியாக பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் விமர்சித்து வருகிறார். மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை, எதிர்க்கட்சிகளுக்கு நிகராக தொடர்ந்து விமர்சித்து வருகிறார் பிரகாஷ்ராஜ். துணிச்சலாக தனது அரசியல் கருத்துக்களை பொது வெளியிலும் சமூக வலைதளங்களிலும் வெளிப்படுத்தி வரும் காரணத்திற்காக பிரகாஷ் ராஜ் பாஜக ஆதரவாளர்களால் சமூல வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருகிறார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பிரகாஷ்ராஜ் மத்திய பெங்களூர் தொகுதியில் போட்டியிட்டார். சுயேட்சையாக போட்டியிட்ட அவர் அந்த தேர்தலில் மொத்தம் 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். ஆனாலும், பாஜக மீதான தனது விமர்சனத்தை அவர் தொடர்ந்து வைத்து வருகிறார்.