மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கொந்தளிப்பும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் எந்த ஒரு திட்டத்துக்குமே மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியோ, மத்திய பட்ஜெட்டை பாராட்டியுள்ளார். இதனால் கொந்தளித்த சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன், “அண்ணாமலையை முந்த போட்டி போடும் ஆர். என்.ரவி” என விமர்சித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை லோக்சபாவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பிகார், ஆந்திராவுக்கு மட்டும் சிறப்பு நிதி உதவி மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இது பிற மாநிலங்களை கொந்தளிக்க வைத்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற ஒரே ஒரு வார்த்தை கூட இம்முறை இடம் பெறவில்லை. மத்திய அரசின் இந்த வஞ்சகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய பட்ஜெட்டை தமிழ்நாடு ஆளுநர் ரவி வரவேற்றுள்ளார். பட்ஜெட் தொடர்பான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளதாவது:-
வறியநிலை மக்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் நிதிநிலை அறிக்கையை வழங்கிய பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த முன்னோக்கு நிதிநிலை அறிக்கை, வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை அளிப்பதுடன், மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளை கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை ஊக்குவிப்பதற்காகவும் இந்த பட்ஜெட்டை குறிப்பாகப் பாராட்டுகிறோம். 2047-ம் ஆண்டுக்குள் சமமான, அனைவரையும் உள்ளடக்கிய, வலிமையான மற்றும் நிலையான தன்னிறைவு பாரதத்தை வளர்த்து, 2030-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறுவதற்கு இந்த நிதிநிலை அறிக்கை வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
அண்ணாமலையை முந்த போட்டி போடும் ஆர். என்.ரவி. தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாத பட்ஜெட்டை “முன்னோக்கு நிதிநிலை அறிக்கை” என்கிறார் தமிழ்நாட்டின் ஆளுநர். ஜூலை 31 பணி ஓய்வு பெறுபவர் எங்கேயோ துண்டைப் போட்டு வைக்கிறார் போல . இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி விமர்சித்துள்ளார்.