தமிழக முதல்வரோ அல்லது விளையாட்டுத் துறை அமைச்சரோ ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சருடன் கல்வராயன் மலைப் பகுதிக்குச் சென்று பார்வையிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய பலி சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்த கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கைகள் தயாராகி வருவதாகவும், நாளை மறுநாள் அதனை தாக்கல் செய்வதாகவும் கூறினார்.
இதை ஏற்று வழக்கு விசாரணையை ஜூலை 26-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், “கள்ளச் சாராயம் மட்டுமே அந்த பகுதி மக்களின் ஒரே ஆதாரமாக உள்ள நிலையில் அதனை ஒழிக்கும் பட்சத்தில் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கல்வராயன் மலைப் பகுதியாக உள்ளதால் அந்தப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என அறிவுறுத்தினர்.
மேலும், “அந்த பகுதி மக்களுக்கு உடனடி தேவையான மருத்துவம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டுமெனவும் கூறிய நீதிபதிகள், அந்தப் பகுதிக்கு தாங்கள் செல்வதை விட, தமிழக முதல்வர் அல்லது அமைச்சர் உதயநிதி, ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சருடன் சென்று பார்வையிட்டால் அந்தப் பகுதி மக்களுக்கு ஏதேனும் நன்மை விளையும்” எனவும் கருத்து தெரிவித்தனர்.