தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணிபுரிவது போல போலி கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், நடவடிக்கையில் இறங்கி உள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவது அம்பலமாகியுள்ளது. பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணிபுரிந்தது போல போலியாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது. AICTE எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் இணையதளத்தில், ஒவ்வொரு பேராசிரியருக்கும் ஒரு யுனிக் ஐடி வழங்கப்பட்டிருக்கும். அதன்படி, ஒரு கல்லூரியில் பணியாற்றும் நபர் மற்றொரு கல்லூரியில் பணியாற்ற முடியாது. ஆனால், முறையாக யுனிக் ஐடியை வழங்காமல், ஒரே பேராசிரியர் 10- க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழு நேரப் பணியாளராக பணியாற்றி வருவதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களை வெளியிட்டது.
இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி ஆக்ஷனில் இறங்கி உள்ளது. முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், முறைகேடு தொடர்பான ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரின் விவரங்களை ஆய்வு செய்ததில், பல பேராசிரியர்கள் தங்கள் ஆதார் எண்ணை மாற்றி அளித்துள்ளனர். அதனால் ஒரே ஆசிரியர் வேறு கல்லூரியில் பணிபுரிவதாக அளித்த தகவலை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களின் பிறந்த தேதியை வைத்து ஆய்வு செய்து, ஒரே பேராசிரியர் 3, 4, 5 என பல கல்லூரிகளில் வேலை பார்ப்பது போல் பெயரை பதிவு செய்துள்ளது தெரியவந்தது என துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், 2023-24ஆம் கல்வியாண்டில் 91 கல்லூரிகளில் பணியாற்றி வந்த 211 பேராசிரியர்கள் பெயர்கள் வேறு கல்லூரியிலும் இருப்பது கண்டறியப்பட்டது. 2024- 25ஆம் ஆண்டுக்குரிய அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பித்த கல்லூரிகளில் 124 கல்லூரிகளில் அளிக்கப்பட்ட பேராசிரியர் பட்டியலில் ஒரே பெயரைக் கொண்ட 470 பேராசிரியர்கள் வேறு வேறு கல்லூரியில் பணியாற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது என துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பேராசிரியர்களின் விபரங்களை முறைகேடாக அளித்தது குறித்து ஆய்வு செய்ய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர், அண்ணா பல்கலைக்கழக உறுப்பினர் மற்றும் அரசு சார்பில் உறுப்பினர் என குழுவை அமைத்து ஒரு மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படும், பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு துவங்கியுள்ள நிலையில், பொது கலந்தாய்வுக்கு முன்னர் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் இனி வாழ்நாள் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிவதை தடுக்கின்ற வகையில் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அதேசமயம், பேராசிரியர்களுக்கு இது குறித்து விளக்கம் அளிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். தவறு செய்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நடப்பாண்டில் 91 கல்லூரிகளுக்கு நிபந்தனையுடன் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பேராசிரியர்களை முறைகேடாக கணக்கு காட்டியது கண்டறியப்பட்டால் உடனடியாக அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதனால், முறைகேடுகளில் ஈடுபட்ட பேராசிரியர்கள், கல்லூரிகள் கலக்கமடைந்துள்ளனர்.