இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா போட்டி!

அதிபர் தேர்தல் நடைபெறும் தேதியை இலங்கை தேர்தல ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். கடந்த 2022-ம் ஆண்டில் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதற்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து இருவரும் பதவி விலகினர். இதைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டில் நாடாளுமன்ற எம்.பி.க்களின் கருத்தொற்றுமை அடிப்படையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கவும், பிரதமராக தினேஷ் குணவர்த்தனவும் பதவியேற்றனர்.

இந்த நிலையில், அதிபர் தேர்தல் நடைபெறும் தேதியை இலங்கை தேர்தல ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 15 முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேபோல, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார். இலங்கை முன்னாள் ராணுவ தளபதியும் எம்.பி.யுமான சரத் பொன்சேகா சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “கடந்த 76 ஆண்டுகளாக ஊழல் கட்சிகள் இலங்கையை ஆட்சி செய்து மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தின. ஊழலை வேரறுக்க வேண்டும். இதற்காக அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.