பள்ளி, கல்லூரிகளில் ஜாதியின் பெயரை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை!

அரசு கல்வி நிறுவனங்களில் பழங்குடியின பள்ளி, கல்லூரி என வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் மேம்பாடு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாட்டிற்கு எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு, தமிழக ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் 80 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 7 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் பள்ளி, மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் 88 கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் தெரு விளக்குகள்,சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளரின் அறிக்கை திருப்தி அளிக்கும் வகையில் இல்லையென தெரிவித்த நீதிபதிகள், கடந்த 10 ஆண்டுகளில் 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது என்றால் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லாமல் தூக்கிச் செல்வது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், ஏழு கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் பள்ளி, மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளது தொடர்பான தெளிவான விவரங்கள் அறிக்கையில் இல்லை எனவும், கூட்டுறவு வங்கிகள் மூலம் 88 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது குறித்த விவரங்களும் முழுமையாக இல்லை எனவும் தெரிவித்தனர். ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்ட தெரு விளக்குகள், சோலார் விளக்குகள் பயன்பாட்டில் உள்ளனவா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இப்படி ஒரு அறிக்கையை தாக்கல் செய்யாமலேயே இருந்திருக்கிலாம் என அதிருப்தி தெரிவித்தனர்.

சமூக நீதி பற்றி பேசிவரும் அரசு, பழங்குடியினர் பள்ளி என அழைப்பது ஏன்? அரசு பள்ளி என மட்டும் அழைக்கலாமே? எனவும், 21ம் நூற்றாண்டிலும் அரசு பழங்குடியின நல பள்ளிகள் என அழைப்பது குறித்தும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். அரசு கல்வி நிறுவனங்களில் பழங்குடியின பள்ளி, கல்லூரி என வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் தலைமையில் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்வதற்காக செல்லும் அரசு குழுவுடன் மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி உடன் செல்ல வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வார காலத்திற்கு தள்ளிவைத்தனர்.