மத்திய கல்வித்துறை சார்பில் தமிழ்க் கல்விக்கு புதிய சேனல் ‘யாழ் டிவி’!

தமிழுக்காக ‘யாழ் டிவி’ எனும் பெயரில் புதிய டிடிஎச் சேனல் தொடங்கப்பட உள்ளது. இதனை வரும் திங்கள்கிழமை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.

மத்திய கல்வித்துறை சார்பில் பிஎம் ஈ-வித்யா திட்டத்தின் கீழ் ஸ்வயம் பிரபா எனும் பெயரில் பள்ளி மாணவர்களுக்கான தொலைக்காட்சி சேனல்கள் செயல்பாட்டில் உள்ளன. இவை, மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறு கல்வி கற்பதற்காக கடந்த 2017, ஜுலை 7-ல் தொடங்கப்பட்டன. கொரோனா பரவல் காலத்தில் இவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. டிடிஎச் சேனல்களான இவை குஜராத்தின் காந்தி நகரிலுள்ள பிஐஎஸ்ஏஜி நிறுவனம் சார்பில் செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்பப்படுகின்றன. இதற்கான பாடத்திட்ட வீடியோ பதிவுகளை என்பிடிஇஎல், ஐஐடி.க்கள், யூஜிசி, சிஇசி, இக்னோ, என்சிஇஆர்டி, என்ஐஓஎஸ் ஆகிய மத்திய அரசின் நிறுவனங்கள் அளிக்கின்றன.

இந்தவகையில், இந்தப் பட்டியலில் முதலாவதாக தமிழுக்காக ‘யாழ் டிவி’ எனும் பெயரில் புதிய டிடிஎச் சேனல் தொடங்கப்பட உள்ளது. இதனை வரும் திங்கள்கிழமை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.
இந்த சேனலுக்கான நிகழ்ச்சியை தயாரிக்கும் பொறுப்பு மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திடம் (சிஐஇடி) அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான பாடங்களை சென்னையிலுள்ள மத்திய செம்மொழி தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (சிஐசிடி), டெல்லியிலுள்ள என்சிஇஆர்டி ஆகியவை தயாரிக்கத் தொடங்கியுள்ளன.

தினமும் 4 மணி நேரத்துக்கான தமிழ்ப் பாடங்கள் இந்த யாழ் சேனலில் ஒளிபரப்பாக உள்ளன. பிறகு இதே பாடங்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் மறுஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய பாடங்கள் மட்டுமின்றி மறு ஒளிபரப்பும் தொடரும்.