நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜிக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் கடந்த 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகம் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்தார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முதல்வர்களும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தனர். ஆனாலும், கூட்டத்தில் கலந்துகொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனக்கு 5 நிமிடம் கூட பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், பாதியில் மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறி வெளிநடப்பு செய்தார். இதற்கு காங்கிரஸ், திமுக உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், மத்திய அரசுத் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகளை, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல்களை அடக்க வேண்டும் என்று ஆளும் பாஜக முயற்சி செய்கிறது. நாடாளுமன்றத்திலும் பேச விடுவது கிடையாது. நிதி ஆயோக் கூட்டத்திலும் பேச விடுவது கிடையாது. ஏதாவது பேசினால் வழக்கு போடுகிறார்கள். இவையெல்லாம் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படுகிறது.
ஒரு மாநிலத்தின் முதல்வர் ஐந்து நிமிடங்கள் பேசியுள்ளார். மேலும் 10 நிமிடங்கள் பேச வேண்டும் என்று விரும்பினால் ஏன் அனுமதிக்கக் கூடாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடந்த போது நடத்தப்பட்ட தேசிய வளர்ச்சி கவுன்சில் உள்ளிட்ட கூட்டங்களை நடத்தியுள்ளோம். அதில், அப்போதைய குஜராத் முதல்வர் மோடி 20-25 நிமிடங்கள் வரை பேசியுள்ளார். யாரும் அவரை குறுக்கிட்டது கிடையாது.. எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. எதிர்க்கட்சி முதலமைச்சர் 5 நிமிஷம் பேசினால் என்ன 10 நிமிஷம் பேசினால் என்ன?
ஆகவே, எதிர்க்கட்சி முதலமைச்சருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் செயலை பாஜக இன்னும் விட்டுவிடவில்லை என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.