பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 212 ஆரம்பப்பள்ளிகள், 49 நடுநிலைப்பள்ளிகள், 31 உயர்நிலைப்பள்ளிகள் 28 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 320 பள்ளிகள் இயங்கி வருகின்றன. 30000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வரும் அப்பள்ளிகளில் 210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 179 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 49 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 50 தலைமையாசிரியர் பணியிடங்கள் என ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாகவே உள்ளதால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஒன்றிய அரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்த பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு இறுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டில் பெரும்பாலான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டது. ஆனால் அதன் பிறகு பழங்குடியினர் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாத காரணத்தால், கடந்த 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி ஏறத்தாழ 420 நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தது. இதனால் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டதால் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பு அரசாணையை வெளியிட்டு பழங்குடி பட்டதாரி ஆசிரியர்களைத் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்ய அரசாணையை வெளியிட்டது. அதன்படி ஏறத்தாழ 320க்கும் மேற்பட்ட பழங்குடி ஆசிரியர்கள் தற்காலிகமாக பணிநியமனம் செய்யப்பட்டு ஆசிரியர் பற்றாக்குறை அப்போதைக்கு சரி செய்யப்பட்டது.
இந்நிலையில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்களாகப் பணிபுரிந்து அறிவார்ந்த மாணவச் சமுதாயத்தை உருவாக்கிய தொகுப்பூதிய ஆசிரியர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி திமுக அரசு அண்மையில் பணியிலிருந்து நீக்கியது. மேலும், கிராம கல்வி குழுவின் வாயிலாகக் காலிப்பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்குமாறு கடந்த சூலை 2 ஆம் தேதி பழங்குடியினர் நல இயக்குநர் மூலம் ஆணையும் பிறப்பித்தது. ஆனால், எளிதில் அணுக முடியாத மலை வாழ்விடங்களில் அமைந்துள்ள பழங்குடியினர் பள்ளிகளில் குறைந்த ஊதியத்துக்கு சமதளப் பகுதிகளில் வசிக்கும் ஆசிரியர்கள் பணி செய்ய விரும்பாத காரணத்தினால் தற்போதுவரை 10 விழுக்காடு விண்ணப்பங்கள் கூட பெறப்படவில்லை என்றும் பள்ளிகளில் முதல் பருவத் தேர்வானது விரைவில் தொடங்க உள்ள நிலையில் ஆசிரியர்களே இல்லாத பழங்குடியின பள்ளி மாணவர்களின் கல்வி முழுமையாகப் பாதிக்கபடும் கொடுஞ்சூழல் நிலவுகிறது.
மாணவர்களின் நலன் பாதிக்கப்படாதிருக்க ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென்று ஆசிரியர் சங்கக் கூட்டமைப்பு நிர்வாகிகள் முறைப்படி பலமுறை கடிதம் கொடுத்த பிறகும் திமுக அரசின் பள்ளிக்கல்வித்துறை அதனை அலட்சியப்படுத்தியதுடன், ஆசிரியர் சங்கக் கூட்டமைப்பு நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்து அதனைப் பொதுவெளியில் பேசுவது தண்டனைக்குரிய குற்றம்போல கட்டமைத்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது திமுக அரசு குற்றக்குறிப்பாணை ஏற்படுத்தியிருப்பது கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் கொடுஞ்செயலாகும். ஆகவே, தமிழ்நாடு அரசு மாணவர்களின் கல்வி நலன் கருதி உடனடியாகப் பழங்குடியின பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மேலும், காலி பணியிடங்களை நிரப்பக் கோரியதற்காக ஆசிரியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளைக் கைவிட வேண்டுமெனவும், நிர்வாகச் சிக்கலுக்கும் குழப்பத்திற்கும் காரணமான பழங்குடியினர் நல இயக்குநரை மாற்ற வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்வதாகவும் சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.