நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன், “இது வரவேற்கக் கூடிய விஷயம் தானே. ஏன் அண்ணாமலை செய்வதை மட்டும் பூதக்கண்ணாடி போட்டு பார்க்கறீர்கள்?” என்று கூறியுள்ளார்.
பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க ஒரு வாரத்தில் 27 லட்சம் ரூபாய் செலவழித்ததாக கூறியுள்ளனர். அது எத்தனை பேர், எத்தனை நாட்கள், அப்படி என்ன உயர் ரகத்தில் உணவு மற்றும் தேநீர் கொடுத்தார்கள். அந்த காஸ்ட்லியான தேநீர் எங்கு வாங்கினார்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும். கோவை மாநகராட்சி நிர்வாகம் இப்போது கொடுத்துள்ள பொத்தாம் பொதுவான பதிலில் திருப்தி இல்லை. மாநகராட்சி மீது நாங்கள் ஏதாவது குறைகள் சொன்னால் கூறினால் எதிர்க்கட்சிகள் என்று சொல்வார்கள். ஆனால் இப்போது மக்களே பிரச்னைகளை கூறுகின்றனர். இந்த பணம் எல்லாம் எங்கே செல்கிறது என்று திராவிட மாடல் ஆட்சியில் இருப்பவர்கள் கண்டுபிடித்து கூற வேண்டும்.
திமுக எப்போதெல்லாம் ஆட்சி பொறுப்பில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீரழியும் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அரசியல் தலைவர்கள் கொலை, பெண்களுக்கு எதிரான பிரச்னைகள், பட்டியல் இனத்தவர்களுக்கு கொடுமைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உருவாகிக் கொண்டிருக்கிறது. புதிய புதிய குற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அவற்றுக்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. கண்துடைப்புக்காக அதிகாரிகளை மாற்றம் செய்யக் கூடாது. மாநில பட்ஜெட்டில் அனைத்து மாவட்டங்களின் பெயர்களும் கூறப்படுவதில்லை. இதற்கு முன்பு நடைபெற்ற பட்ஜெட்டில் கூட அனைத்து மாநிலங்கள் பெயரும் குறிப்பிடப்படவில்லை.
மோடியைப் பற்றி திட்டினால் தான் அரசியல் வாழ்க்கை என திமுகவினர் முடிவு செய்து வைத்துள்ளார்கள். தமிழக முதல்வர் மாதம் ஒருமுறை பிரதமரை ஏதாவது ஒரு அரசு நிகழ்ச்சிக்கு அழையுங்கள். யார் வேண்டாம் என கூறினார்கள். அவர் நிச்சயம் வருவார். எந்த ஒரு நிர்வாக விஷயத்திலும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் வளர்ச்சி வேகமாக இருக்கும். ஆனால் அரசியலில் நிர்வாகம் குறித்து இங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்குப் புரிந்து கொள்ளும் தன்மை இல்லை.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அண்ணாமலையும் கட்டியணைத்துக் கொண்டதை சந்தோஷமாக பார்க்கிறேன் . தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் என்றாலே எதிரி கட்சிகள் என்று பாவித்து நல்லது கெட்டவைக்கு கூட செல்லவிடுவதில்லை. அரசியல் நாகரீகம் என்ற வகையில் அதை ஆரோக்கியமாக பார்க்கிறேன். எங்கள் மாநில தலைவர் எதை செய்தாலும் ஏன் பூதக்கண்ணாடி வைத்து பார்க்கிறீர்கள். தமிழ்நாட்டில் கிளை சிறைகள் என்பது குற்ற செயல்கள் திட்டமிடுவதற்கான இடமாக உள்ளது. அதில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் புதிய அரசியல் செய்வதற்கு யார் வந்தாலும் மகிழ்ச்சி. கட்டியணைப்பதன் மூலம் புதிய உறவு வருகிறதா என்பதை அவர்கள் தான் கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.