காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை ஒரு மாதமாக கொட்டித் தீர்த்ததால் அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டன. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 1.30 லட்சம் கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இதேபோல கபினியில் இருந்தும் 30,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட்டது. காவிரியில் பெருமளவு தண்ணீரை ஒரேயடியாக கர்நாடகா திறந்துவிட்டிருப்பதால் ஒகேனக்கல்லில் பெருவெள்ளமாக காவிரி பாய்ந்து மேட்டூருக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் காவிரி ஆற்றுக்கு நன்றி செலுத்தும் விதமாக கிருஷ்ணராஜ சாகர் அணையில் பாகினா பூஜை நடத்தப்பட்டது. இதில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா கூறியதாவது:-
மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனாலும் தமிழ்நாடு அரசு இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. தமிழ்நாட்டு அரசுடன் மேகதாது அணை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். மத்திய அரசு மட்டும் ஒப்புதல் கொடுத்துவிட்டால் மேகதாது அணையை விரைவாக கட்டி முடிப்போம் என்றார்.
கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறுகையில், பெங்களூர் மாநகரின் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காகவே மேகதாது அணை கட்டப்படுகிறது. காவிரியில் திறக்கப்படும் நீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வீணாகவே பெருமளவு நீர் கடலில் கலக்கிறது. இப்படி காவிரி நீர் வீணாவதைத் தடுப்பது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்றார்.