மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், நீர் மேலாண்மையைக் கடைபிடிக்கவும், சம்பா சாகுபடி செய்வதற்குரிய இடுபொருட்களை வழங்கவும் திமுக அரசை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இறைவனின் கருணையால் கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியுள்ள நிலையில், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாலும், இந்தத் தருணத்தில் நீர் மேலாண்மையைக் கடைபிடிப்பதும், விவசாயிகளுக்கு தேவையானவற்றை உடனடியாக வழங்குவதும் மிகவும் அவசியம்.
பெரும்பாலான டெல்டா விவசாயிகள் காவேரி நீரை மட்டுமே நம்பியுள்ள நிலையில், மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இருப்பு இல்லாததன் காரணமாக, மேட்டூர் அணையிலிருந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட இயலவில்லை. இருப்பினும், நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். காவேரி நீரை நம்பியுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்ளவில்லை. தற்போது மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், சம்பா சாகுபடியை மேற்கொள்ள காவேரி நீரை நம்பியுள்ள விவசாயிகள் தயாராகி வருகின்றனர். `
இந்தச் சூழ்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர் பெருமளவில் குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள நிலப்பகுதிகளுக்கு மட்டும் செல்லுமாறும், ஆறுகளில் தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளுமாறும், சம்பா விதைப்பு மேற்கொண்ட பிறகு அந்த நிலப் பகுதிகளுக்கு நீரினை அளிக்கும் வகையிலும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று விவசாயப் பெருங்குடி மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும், சம்பா சாகுபடிக்குத் தேவையான விதை நெல், உரம் போன்ற இடுபொருட்களை முன்கூட்டியே விவசாயிகளுக்கு வழங்கவும், பயிர்க்கடனை உடனடியாக அளிக்கவும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டின் வேளாண் உற்பத்தியை பெருக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, காவேரி டெல்டா பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நீரினை அளிக்கும் வகையில் நீர் மேலாண்மையை திறம்படக் கடைபிடிக்கவும், விவசாயிகளுக்கு உரிய இடுபொருட்களை உடனடியாக வழங்கவும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.